கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் நாடு தழுவிய அளவில் சிறப்புப் பிரச்சாரம் தொடங்கப்படும் என ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (CJP) அமைப்பின் நிறுவனர் அபிஜித் திப்கே அறிவித்துள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:


சுதந்திரம் அடைந்து 80 ஆண்டுகள்: கிராமத்துப் பள்ளிகளின் அவலநிலை!
“இந்தியா சுதந்திரம் அடைந்து 80 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும் நாடு முழுவதும் கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வருகின்றன.
மாணவர்கள் இன்னமும் பள்ளிகளுக்கு நீண்ட தூரம் நடந்து செல்லும் நிலையே உள்ளது.
அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் பல பள்ளிகளில் இல்லை.
இதனால் குறிப்பாக பெண் குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.”
“புதிய நாடாளுமன்றம் அமைக்க முடிந்த நம்மால் பள்ளி கட்ட முடியாதா?”
தொடர்ந்து பேசிய அவர், நாட்டின் வளர்ச்சி குறித்து பல கேள்விகளை எழுப்பினார்:
“நாம் புதிய நாடாளுமன்றத்தையும், புதிய பிரதமரின் இல்லத்தையும் அமைத்துள்ளோம். ஆனால் ஏன் நம்மால் கிராமங்களில் புதிய பள்ளிகளை உருவாக்க முடியவில்லை?
கிராமங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளை நமது நாட்டின் எதிர்காலமாக நாம் கருதவில்லையா? பெரிய நகரத்தில் ஒரு குழந்தைக்குக் கிடைக்கும் தரமான வசதிகளை, கிராமத்து குழந்தைகளால் பெற முடியாத நிலையை ஏன் இன்னும் மாற்ற முடியவில்லை?”
ஆகஸ்ட் 15 முதல் தொடங்குகிறது விழிப்புணர்வு இயக்கம்!
80-வது சுதந்திர தினமான வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி, அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வலியுறுத்தி நாடு தழுவிய பிரச்சாரம் தொடங்கப்பட உள்ளது.
இப்பிரச்சாரத்தின் முதற்கட்டமாக, மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதியில் உள்ள தனது சொந்த கிராமமான ஹிங்கோலிக்குச் சென்று, அங்குள்ள அரசுப் பள்ளிகளை சீரமைத்து மேம்படுத்துமாறு கிராமத் தலைவரிடம் நேரில் கோரிக்கை விடுக்க உள்ளதாக அபிஜித் திப்கே தெரிவித்துள்ளார்.
கிராமத் தலைவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வேண்டுகோள்:
“இந்த காணொலியைக் காணும் அனைத்து கிராமத் தலைவர்களும், பெற்றோர்களும் தங்கள் கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலையை மேம்படுத்த முன்வர வேண்டும்.
பள்ளிகள் மேம்படுத்தப்பட்ட பிறகு, அதன் நிலையை விளக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். அவை சிஜேபி-யின் (CJP) அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிடப்படும்” என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
24 மணி நேரமும் ரேஷன் அரிசி! அசத்தும் சத்தீஸ்கர் அரசு: வந்துவிட்டது ‘அன்னபூர்த்தி தானிய ஏடிஎம்’!
