ஆளுங்கட்சியில் வலம் வரலாம் என்ற கனவோடு அதிமுகவிலிருந்து விலகித் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) தங்களை இணைத்துக் கொண்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகளுக்கு, மூன்று மாதங்களைக் கடந்தும் துளியளவும் பொறுப்புகள் வழங்கப்படாதது அக்கட்சியில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தவெக மேலிடத்தின் இந்த மெத்தனப் போக்கைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட தலைவர்கள் நேரடியாக முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்துத் தங்களின் அதிருப்தியைப் பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
ஆசை வார்த்தைகளால் ஈர்க்கப்பட்ட தலைவர்கள்!
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சிப் பூசல் மற்றும் கருத்து வேறுபாடுகளைப் பயன்படுத்தி, முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் பலரை தவெக தன் பக்கம் ஈர்த்தது. கட்சியில் இணையும்போதே தங்களுக்கு உரிய முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படும் என்று மேலிடம் அளித்த வாக்குறுதிகளை நம்பி பலரும் தவெகவில் இணைந்தனர்.

ஆனால், கட்சியில் இணைந்து மூன்று மாதங்கள் நெருங்கும் நிலையிலும், பெரும்பாலானோருக்கு பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை. மிகச் சமீபத்தில் இணைந்த சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் போன்ற ஒருசிலருக்கு மட்டும் அவசரகதியில் பதவிகள் வழங்கப்பட்ட நிலையில், அவர்களுடன் வந்த மற்ற மூத்த தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களும் ஓரங்கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்தின் பதிலும் தொண்டர்களின் கவலையும்!
தங்களுக்குரிய பொறுப்புகள் குறித்துக் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்தை நேரில் சந்தித்தும், தொலைபேசி வாயிலாகவும் தொடர்புகொண்டும் முறையான விளக்கங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. “பொறுமையாக இருங்கள், காலம் வரும்போது பதவி தரப்படும்“ என்ற ஒரே பதிலையே கூறி வருவதால், அதிமுகவின் முக்கியப் பொறுப்புகளில் கோலோச்சிய தலைவர்கள் தற்போது தீவிர அதிருப்தியில் உள்ளனர்.

மேலும், அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கத்திலிருந்து விலகி, தவெகவில் புதிதாகத் தொழிற்சங்கம் தொடங்கப்பட்டால் அதில் முக்கியப் பொறுப்புகளைப் பிடித்துவிடலாம் என்ற கணக்கில் வந்த தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. கட்சியில் இதுவரை எந்தவொரு தொழிற்சங்க அமைப்பும் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நேரடி மோதலுக்குத் தயாராகும் தலைவர்கள்!
தவெகவில் தங்களுக்கு உரிய மரியாதை கிடைக்குமா அல்லது ஏமாற்றப்படுகிறோமா என்ற கடும் சந்தேகத்தில் உள்ள நிர்வாகிகள், இனிமேலும் பொதுச்செயலாளரை நம்பிப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர். எனவே, நேரடியாகக் கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய்யைச் சந்தித்துப் பேசி இதற்கொரு தீர்வு காண வேண்டும் என அவர்கள் போர்க்கொடி தூக்கத் தயாராகி வருகின்றனர்.

பதவிக்காகக் காத்திருக்கும் விடுபட்டோர் பட்டியல்
அதிமுகவிலிருந்து விலகித் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மூத்த தலைவர்களில், முன்னாள் அமைச்சர்களான எம்.சி. சம்பத், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், சிவபதி, எஸ். வளர்மதி, எம்.எஸ்.எம். ஆனந்தன், பச்சைமால் ஆகியோருக்கு இதுவரை எவ்விதக் கட்சிப் பொறுப்புகளும் வழங்கப்படவில்லை.
இவர்களுடன் இணைந்து வந்த முக்கிய நிர்வாகிகளான பாலகங்கா, நீலகிரி கப்பச்சி வினோத், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என். ராமச்சந்திரன், முன்னாள் துணை கொறடா சு.ரவி மற்றும் அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோரும் எந்தப் பொறுப்பும் இன்றி ஓரங்கட்டப்பட்டு, தவெக மேலிடத்தின் பதவி அறிவிப்புக்காகக் காத்திருக்கும் சூழல் நிலவுகிறது.
