பவள விழா காணும் திராவிட முன்னேற்றக் கழகத்தை, நூற்றாண்டை நோக்கிச் சிறப்பாக வழிநடத்திச் செல்லும் நோக்கில், கட்சியின் அமைப்பு ரீதியான கட்டமைப்பில் மிகப் பெரிய மாற்றங்களை தி.மு.க. தலைமைச் செயற்குழு அறிவித்துள்ளது. கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முன்னெடுப்பில், மறுசீரமைப்புக் குழுவின் பரிந்துரைப்படி, இனி கட்சியின் நிர்வாகப் பொறுப்புகளுக்குக் கடுமையான வயது வரம்பும், பதவிக்காலக் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளன.
நிர்வாகக் கட்டமைப்பில் ‘புது ரத்தம்’
கட்சியின் அடிப்படை அலகான கிளைக் கழகம் முதல் மாவட்டக் கழகங்கள் வரை அனைத்திலும் புதிய மாற்றங்கள் புகுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, இளைய தலைமுறையினருக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் வகையில், நிர்வாகிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கிளைக் கழகங்கள்: கிளைச் செயலாளர்களுக்கான அதிகபட்ச வயது 45 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருவர் இருமுறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும். மாநகரப் பகுதிகளிலும் இதேபோன்ற கிளை அமைப்புகள் உருவாக்கப்படும்.
வட்டக் கழகங்கள்: மாநகர, நகர மற்றும் பேரூர்க் கழகங்களின் வட்டச் செயலாளர்களுக்கான அதிகபட்ச வயது 50. இவர்களும் அதிகபட்சம் இருமுறை மட்டுமே அந்தப் பதவியில் இருக்க முடியும்.
நகரம் மற்றும் பேரூராட்சிகள்: பேரூர்க் கழகச் செயலாளர்கள் மற்றும் நகரச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 60 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கும் பதவிக்காலம் இருமுறை மட்டுமே.
பகுதிக் கழகங்கள்: மாநகரப் பகுதிகளின் அச்சாணியாக விளங்கும் பகுதிக் கழகங்களின் செயலாளர்களுக்கும் 60 வயது உச்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்வு
கட்சியின் இரத்தநாளங்களாக விளங்கும் மாவட்டக் கழகங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள 77 மாவட்டக் கழகங்களை, வருவாய் மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு 110 மாவட்டங்களாக உயர்த்தி, கழகத் தலைமை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், மாவட்டச் செயலாளர்களுக்கான அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டச் செயலாளர் ஒருவர் அதிகபட்சமாக மூன்று முறை மட்டுமே அப்பொறுப்பில் நீடிக்க முடியும்.
ஒன்றியக் கழகங்கள் சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாக மறுசீரமைக்கப்பட வேண்டும். ஒரு ஒன்றியம் ஒரே சட்டமன்றத் தொகுதிக்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
15 நாட்களில் புதிய கட்டமைப்பு
புதிதாக அமையவுள்ள 110 மாவட்டங்களுக்கான தொகுதிகளைக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களே முடிவெடுத்து அறிவிப்பார். அவர் அறிவித்த பிறகு, 15 நாட்களுக்குள் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, வட்ட மற்றும் கிளைக் கழகங்களின் பட்டியலை உருவாக்கி, தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. “இந்த அமைப்பு மாற்றங்கள் கழகத்தைப் பன்மடங்கு வலிமைப்படுத்தும்; தொண்டர்களுக்குப் புதிய உற்சாகத்தைத் தரும்” என்று தி.மு.க. தலைமை நம்பிக்கை தெரிவித்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தி.மு.க. கொண்டு வந்துள்ள இந்த நிர்வாக சீர்திருத்தங்கள், தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலைஞரின் அரசியல் சாதுர்யம் மற்றும் போராட்ட குணம்: நக்கீரன் கோபால் புகழஞ்சலி
