கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுச் சுமார் 30 ஆண்டுகளாகச் சிறைவாசம் அனுபவித்து வந்த 105 வயது முதியவரின் எஞ்சிய தண்டனைக் காலத்தைத் தள்ளுபடி செய்து, அவரைப் பூரண விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
74 வயதில் தொடங்கிய சிறைவாசம்
மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தைச் சேர்ந்த ரசிக் சந்திரன் மண்டல் (105) என்பவருக்கு, கடந்த 1988-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பான விசாரணையில் 1994-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 74. தண்டனைக்குப் பிறகு, அவர் தனது வாழ்நாளின் பெரும் பகுதியைச் சிறையிலேயே கழித்தார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகத் தன்னை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் நெகிழ்ச்சித் தீர்ப்பு
முன்னதாக 2024-ஆம் ஆண்டு இவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்த உச்ச நீதிமன்றம், தற்போது வழக்கை விசாரித்து இறுதி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அப்போது நீதிபதிகள், “மனுதாரரின் வயது மற்றும் அவரது தற்போதைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவருக்கு விதிக்கப்பட்ட எஞ்சிய தண்டனைக் காலம் தள்ளுபடி செய்யப்படுகிறது. இனி அவர் முழுமையான சுதந்திர மனிதராகத் வாழலாம்” என்று கூறி வழக்கையும் முடித்து வைத்தனர்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, 105 வயதில் சுதந்திர மனிதனாகத் தனது இறுதிக்காலத்தைக் குடும்பத்தினருடன் கழிக்க ரசிக் மண்டலுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
