ஆடு வளர்ப்புத் தொழிலில் “மாதம் ₹50,000 லாபம் பெற முடியும்” என்ற கருத்து நிலவி வரும் சூழலில், அது எவ்வாறு நடைமுறையில் சாத்தியமாகும் என்பதற்கான பிராக்டிகலான கணக்குகளையும் தொழில் உத்திகளை குறித்தான தெளிவான விளக்கம் இதோ!
மாதம் ₹50,000 லாபமும் – தேவையான ஆடுகளின் எண்ணிக்கையும்
மாதம் ₹50,000 லாபம் என்றால் ஆண்டிற்கு ₹6 லட்சம் நிகர லாபத்தை இலக்காகக் கொள்ள வேண்டும். தொழில் தொடங்குபவர்கள் மொத்த வருமானத்திற்கும் (Revenue) தீவனம், மருத்துவம் மற்றும் பராமரிப்புச் செலவுகள் போகக் கையில் நிற்கும் நிகர லாபத்திற்கும் (Net Profit) இடையேயான வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இறப்பு விகிதம், சினை பிடிக்காத காலங்கள், பராமரிப்பு மற்றும் தீவனச் செலவுகளைக் கழித்துப் பார்த்தால், ஒரு வருடத்திற்கு ₹6 லட்சம் நிகர லாபம் ஈட்ட தோராயமாக 40 முதல் 50 ஆரோக்கியமான தாயாடுகளும் அதற்குத் தேவையான கிடாக்களும் கண்டிப்பான தேவையாகும். 10 அல்லது 25 ஆடுகளை வைத்துக்கொண்டு இந்த இலக்கை அடைய முடியாது.
முதலீடும் பணப்புழக்கமும் (Cash Flow)
50 ஆடுகள் கொண்ட பண்ணையைத் தொடங்க ஆடுகள் வாங்கும் செலவு, கொட்டகை அமைத்தல், பசுந்தீவனப் பரப்பு, அவசர மருத்துவ நிதி (Emergency Medical Fund) ஆகியவை தேவைப்படும். மேலும், ஆடு வளர்ப்பில் மாதந்தோறும் குறிப்பிட்ட நாளில் நிலையான சம்பளம் வராது. தினசரி பராமரிப்புச் செலவுகள் இருந்தாலும், குட்டிகள் வளர்ந்து விற்பனைக்கு வரும்போது மட்டுமே மொத்தமாகப் பணப்புழக்கம் ஏற்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
லாபத்தை அதிகரிக்கும் 5 முக்கிய வழிகள்:
- சொந்த நிலத்திலேயே பசுந்தீவனம் வளர்ப்பதன் மூலம் தீவனச் செலவைக் கணிசமாகக் குறைக்கலாம்.
- ஆரோக்கியமான சிறந்த தாயாடுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- குடற்புழு நீக்கம் மற்றும் தடுப்பூசிகளை அட்டவணைப்படி தவறாமல் போட வேண்டும்.
- இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக இறைச்சி சந்தையில் விற்கப் பழக வேண்டும்.
- பண்டிகைக் காலங்களை இலக்காகக் கொண்டு ஆடுகளை விற்பனை செய்ய திட்டமிட வேண்டும்.
புதியவர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பான வழிமுறை
தொழிலில் எவ்வித அனுபவமும் இன்றி நேரடியாக 50 ஆடுகளுடன் தொடங்குவது அதிக அபாயத்தை ஏற்படுத்தும். அதற்குப் பதிலாக, ஆரம்பத்தில் 10 முதல் 15 ஆடுகளுடன் சிறிய அளவில் பண்ணையைத் தொடங்கி, பராமரிப்பு, தீவன நிர்வாகம் மற்றும் உள்ளூர் சந்தை நிலவரங்களைக் கற்றுக்கொண்ட பிறகு, படிப்படியாக 50 ஆடுகள் கொண்ட பண்ணையாக உயர்த்தவதே பாதுகாப்பான மற்றும் வெற்றிகரமான வழியாகும்.
ஜோதிடத்தை விட உழைப்பே சிறந்தது: வாழ்க்கையை மாற்றும் ‘ஸ்ரீ ஆசான்ஜி’யின் வாழ்வியல் பாடம்
