சட்டசபையில் முன்னாள் அமைச்சர்கள் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவதாகவும், அவர்களுக்கு மாண்பு இருக்கிறதா என்றும் அமைச்சர் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.


ஜனநாயக வழிமுறையும் சட்டசபை நடவடிக்கைகளும்
திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரமேஷ் கூறியதாவது:
“ஜனநாயக முறைப்படி சட்டசபையை நடத்தும்போது நிச்சயமாக அனைவரின் குரல்களுக்கும் பதில் அளிக்கப்பட்டு வருகிறது. இது போன்ற வார்த்தைகள் இருந்தால் அவற்றை நீக்குவது மரபு. கடந்த ஆட்சியில் ஜனநாயகத்திற்கு இடமே இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் இதுபோன்ற வார்த்தைகளை நீங்கள் கேட்டிருக்க மாட்டீர்கள்.
இந்த ஆட்சியில் ஜனநாயகத்திற்குப் மிகப்பெரிய முக்கியத்துவம் அளித்து ஆட்சி நடத்துகிறோம். ஜனநாயகத்தின்படி அதற்கான பணிகளைச் சபாநாயகர் சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறார்.
நாங்கள் சட்டசபையில் பேசிக்கொண்டிருக்கிறோம். முதல்முறை எம்.எல்.ஏ-க்கள் பலர் சட்டசபையில் மாண்போடு கருத்துக்களையும் மக்கள் பிரச்சினைகளையும் முன்வைக்கிறோம். அதேபோல் எதிர்க்கட்சியினரின் கருத்துக்களுக்கும் பதில் அளித்து வருகிறோம்.”
எதிர்க்கட்சியினரின் செயல்பாடுகள் மீது குற்றச்சாட்டு
“ஆனால் எதிர்க்கட்சியினர் சட்டசபையில் உட்கார்ந்துகொண்டு எழுந்து கூச்சல் போடுகிறார்கள்; ஒவ்வொரு வரிக்கும் கூச்சல் போட்டு இறங்கி ஓடி வருகிறார்கள். சில முன்னாள் அமைச்சர்கள் பின்னாடி உட்கார்ந்துகொண்டு, எங்கள் அமைச்சர்கள் பேசும்போது தகாத வார்த்தைகளில் பேசுகிறார்கள்.
சட்டசபையில் சண்டையை நடத்திவிட வேண்டும் என்ற நோக்கில் எதிர்க்கட்சியினர் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு முதலில் மாண்பு இருக்கிறதா? நாங்கள் தவறான எந்த வார்த்தைகளையும் பேசவில்லை. முதல்வர் விஜயை நம்பி எங்கள் கட்சிக்கு வந்தவர்களுக்கு எந்தக் குறையும் இல்லாமல் அவர் நிச்சயம் பார்த்துக்கொள்வார்; என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.”
கோவில் திருப்பணிகள் மற்றும் பட்ஜெட் அறிவிப்புகள்
“தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு துறையிலும் மக்களுக்குத் தேவையான புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம். ஹிந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையும் மிகச் சிறப்பாக முடிந்துள்ளது.
நிறைய கோவில்களில் திருப்பணிகளைச் செய்யும் வேலையைக் கையில் எடுத்துள்ளோம். குறிப்பாக ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்கள் மற்றும் முழுமையாகச் சிதிலமடைந்த திருக்கோவில்களை மீண்டும் புதுப்பித்து வழிபாட்டிற்குக் கொண்டுவரும் வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களுக்குத் தேவையான அனைத்தையும் முதல்வர் விஜய் செய்வார்” என்று அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
ஒரு பைசா செலவில் தங்க மோதிரம் சாத்தியமா? – ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் டெண்டர் பின்னணி
