தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழலில், அரசாங்கத்தின் தவறுகளைத் தட்டிக்கேட்கும் ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது ஏவப்படும் அடக்குமுறைகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மக்கள் மத்தியிலான கோபத்தையும் நிர்வாகத் திறமையின்மையையும் மறைக்க ஆளுங்கட்சி கையாளும நிருவாக நடவடிக்கைகள் கடும் கண்டனத்திற்கு ஆளாகி வருகின்றன.
திரைப்படத் தோல்வியும் அபத்தமான குற்றச்சாட்டும்
சமீபத்தில் வெளியாகி வணிக ரீதியாகத் தோல்வியடைந்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் பின்னடைவுக்கு மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் தான் காரணம் என ஆளுங்கட்சியினர் தரப்பில் கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதும் தோல்வியடைவதும் அதன் தரம் மற்றும் கதைக்களத்தைச் சார்ந்ததே தவிர, இதில் ஊடகவியலாளரைச் சுட்டிக்காட்டுவது அபத்தத்தின் உச்சம் எனச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தன் மீதான விமர்சனங்களைத் திசைதிருப்ப ஊடகவியலாளர் மீது பழிபோடும் இச்செயல் ஆளுங்கட்சியின் அச்சத்தையே காட்டுவதாகக் கூறப்படுகிறது.
மூன்று வழக்குகள் பதிவு – எழும் எதிர்ப்புகள்
ஆளுங்கட்சியின் முறைகேடுகளையும், மக்கள் விரோதப் போக்கையும் துணிச்சலுடன் அம்பலப்படுத்தி வரும் நக்கீரன் கோபால் மீது தொடர்ச்சியாக வழக்குகளைத் தொடுத்து முடக்க நினைப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஜனநாயகத்தின் நான்காம் தூணாக விளங்க வேண்டிய ஊடகங்கள் மீது அதிகாரத் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, அடுத்தடுத்து மூன்று வழக்குகள் பதியப்பட்டிருப்பது ஊடகச் சுதந்திரத்திற்கு எதிரானது எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
விமர்சனங்களை நேர்மையாக எதிர்கொள்ள முடியாமல் சட்டத்தின் மூலம் மிரட்டப் பார்க்கும் இந்த எதேச்சதிகாரப் போக்கு நெருக்கடி நிலையை நினைவுபடுத்துவதாக உள்ளது. அரசியல் லாபத்திற்காகப் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்படும் இத்தகைய அவதூறுகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் தமிழக மக்கள் உரிய நேரத்தில் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
