தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான ஜோசப் விஜய்யின் அறக்கட்டளை பெயரில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் பொதுமக்களுக்கு ரூ.10 லட்சம் வரை நிதி உதவி தருவதாகக் கூறி சைபர் குற்றவாளிகள் பெரும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இந்தூர் குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
வடமாநிலங்களில் ரீல்ஸ் மோகம்: சாதகமாக்கிய சைபர் கும்பல்
தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியுள்ள த.வெ.க அரசு, சமூக வலைதளங்கள் மற்றும் ‘ரீல்ஸ்’ (Reels) மூலமாக மக்களிடையே தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வந்தது. தற்போதும் த.வெ.க நிர்வாகிகள் ரீல்ஸ்கள் வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வரும் சூழலில், தமிழகத்தில் மட்டுமல்லாமல் வட மாநிலங்களிலும் விஜய் தொடர்பாக இந்தியில் பல்வேறு ரீல்ஸ்கள் பரவி வருகின்றன. குறிப்பாக, “தமிழக முதல்வர் விஜய் தேசிய அரசியலுக்கு வரப்போகிறார்” என்பது போன்ற ரீல்ஸ்கள் வடமாநிலங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்தன. இந்த பிரபலத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட வடமாநில சைபர் குற்றவாளிகள், விஜய் பெயரில் அறக்கட்டளை இயங்குவதாகக் கூறி போலி விளம்பரங்களை உலா வரவிட்டு பொதுமக்களை ஏமாற்றத் தொடங்கியுள்ளனர்.

ரூ.10 லட்சம் நிதியுதவி என ஆசை வார்த்தை
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஏழை மக்கள், சிறு தொழில் செய்வோர் மற்றும் ஸ்டார்ட்-அப் தொடங்க விரும்புவோரைக் குறிவைத்து இந்த சைபர் கும்பல் கைவரிசை காட்டியுள்ளது. விஜய்யின் தொண்டு நிறுவனத்திலிருந்து பேசுவதாக நம்பவைத்து, ரூ.10 லட்சம் வரை உதவித்தொகை பெறலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதற்காக, “பதிவுக்கட்டணம், ஆவணச் சரிபார்ப்புக் கட்டணம் மற்றும் செயல்பாட்டுக் கட்டணம்” என்ற பெயரில் ரூ.1,000 முதல் ரூ.50,000 வரை வசூலித்து போலி நபர்கள் மோசடி செய்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இது தொடர்பாக 6 புகார்கள் பதிவாகியுள்ளதாக இந்தூர் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தமிழக காவல்துறை உதவி நாடுப்பு
இந்தத் தொடர் மோசடிகள் குறித்து இந்தூர் குற்றத் தடுப்புப் பிரிவு போலி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. மோசடியின் பின்னணியில் உள்ள நபர்களைக் கண்டறியவும், வங்கி கணக்குகளை ஆய்வு செய்யவும் இந்தூர் குற்றப்பிரிவு போலீசார், தமிழக காவல்துறையின் உதவியை நாடியுள்ளனர். பொதுமக்கள் இதுபோன்ற போலி வாக்குறுதிகளையும், இணையதளங்களில் வரும் போலி அறக்கட்டளை விளம்பரங்களையும் நம்பி யாருக்கும் பணம் அனுப்பி ஏமாற வேண்டாம் என இந்தூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக அரசியலில் சலசலப்பு: ஜனவரியோடு முடிகிறதா தவெக ஆட்சி? தராசு ஷியாம் அதிரடி அலசல்!
