தமிழகச் சட்டமன்றத்தில் த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) அரசு மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் காரசார விவாதங்கள் குறித்தும், உள்ளாட்சித் துறை செயல்பாடுகள் மற்றும் அதிகாரிகள் நிர்வாகம் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் பிரியன் தனது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.
உள்ளாட்சித் துறை பிரச்சனையும் அதிகாரிகள் கட்டுப்பாடும்
சட்டமன்றத்தில் த.வெ.க தரப்பில், “மாநகராட்சி, நகராட்சிகளில் திமுக மேயர்களும் உறுப்பினர்களுமே இருப்பதால் பணிகள் முடங்கியுள்ளன” எனக் குற்றம் சாட்டப்படுவது குறித்துப் பேசிய பிரியன், “தற்போது ஆட்சியில் இருப்பது த.வெ.க. உள்ளாட்சித் துறை செயலாளரும், அமைச்சரும் கொடுக்கும் உத்தரவுகளைத் தான் அதிகாரிகள் கேட்க வேண்டும். ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக மன்றங்களுடன் அதிகாரிகள் இணைந்து செயல்பட அரசு முறையான வழிகாட்டுதல்களை வழங்கவில்லை.

திமுக மேயர்களுக்கு நல்ல பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே நிதிகளை முடக்கி வைத்து, அத்தியாவசியப் பணிகளை மட்டும் செய்யும் நிலையை அரசு உருவாக்கியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மன்றங்களை மதிக்க விருப்பமில்லை என்றால், அரசிடம் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி உள்ளாட்சி அமைப்புகளைக் கலைத்துவிட்டுத் தேர்தலைச் சந்திக்க வேண்டியதுதானே?” எனக் கேள்வி எழுப்பினார்.
“பைல்கள் இருந்தால் நடவடிக்கை எடுங்கள்!”
திமுக ஆட்சிக்கால ஊழல் தொடர்பான பைல்கள் தங்கள் கைவசம் இருப்பதாக விஜய்யும் த.வெ.க அமைச்சர்களும் கூறி வருவது தொடர்பாக, “ஊழல் கோப்புகள் கையில் இருப்பதாக வாரக் கணக்கில் பிரசாரம் மட்டுமே செய்து கொண்டிருக்கக் கூடாது. ஆட்சியில் உள்ளீர்கள், காவல் துறை உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆதாரங்கள் இருந்தால் உடனடியாக வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டுச் சட்டமன்றத்தில் ‘ஸ்கோர்’ செய்வதற்காகவும், சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ வருவதற்காகவும் ஊழல் குற்றச்சாட்டுகளைப் பிரசாரப் பொருளாக மட்டுமே பேசுவது சரியான அரசியல் அணுகுமுறை அல்ல.”
சேகர் பாபுவும் அரசுத் தகவல் கசிவும்
முன்னாள் அமைச்சர் சேகர் பாபு அறநிலையத் துறையை வேவு பார்ப்பதாக த.வெ.க குற்றம் சாட்டுவது குறித்த கேள்விக்கு, “ஒரு துறையின் இரகசியங்கள் அல்லது தகவல்கள் வெளியில் கசிகின்றன என்றால், அதற்கு அந்தத் துறையில் உள்ள அதிகாரிகளே பொறுப்பு. அதிகாரிகளைச் சரியாக நிர்வகிக்காமல், தகவல்கள் கசிகிறது என்று வெளியில் பேசுவது அரசின் பலவீனத்தையே காட்டுகிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில் இருந்த அதிகாரிகளும், திமுக ஆட்சிக்காலத்தில் இருந்த அதிகாரிகளும் தற்போதும் பணிகளில் உள்ளனர். திறமையான உளவுத்துறை மூலம் தகவல்களைக் கசியவிடும் கருப்பாடுகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, சாக்குப்போக்குகளைக் கூறக்கூடாது.”
அதிமுக மீதான மென்மையான போக்கு ஏன்?
75 ஆண்டுகால ஆட்சியை விமர்சிக்கும் த.வெ.க, அதிமுக ஆட்சிக்கால ஊழல்களைப் பற்றிப் பேசாமல் திமுகவை மட்டுமே குறிவைப்பது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த பிரியன், “அதிமுகவில் இருந்து மேலும் சில சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் இழுக்க வேண்டிய தேவை த.வெ.க அரசுக்கு உள்ளது. அதற்காகவே எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் அதிமுக ஆட்சியைக் கடுமையாக விமர்சிக்காமல், அவர்கள் மீதான மென்மையான போக்கைக் கடைப்பிடித்துத் தாஜா செய்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.
விவசாயியின் தோளில் கைபோட்டு அன்பு நெகிழ்ச்சி: மேட்டூர் அணையில் முதலமைச்சர் விஜய்!
