அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கான நடப்பாண்டு பொதுப்பிரிவு கலந்தாய்வு மூன்று சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில்,கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் பொறியியல் படிப்புகளில் மாணவர்களின் சேர்க்கை 5 சதவீதம் வரை குறைந்துள்ளது. ஐ.டி துறையில் ஏற்பட்டுள்ள வேலை இழப்பு அச்சம் மற்றும் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் குறைவாக இருப்பது இதற்கு முக்கியக் காரணமாகக் கல்வியாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.


கலந்தாய்வு நிலவரம் மற்றும் புள்ளிவிவரங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இணைப்பு பெற்றுள்ள 422 பொறியியல் கல்லூரிகளில் உள்ள சுமார் 2,67,000 இடங்களுக்கான கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் மாணவர் சேர்க்கைக்குழு நடத்தி வருகிறது. நடப்பாண்டில்கடந்த ஆண்டைக் காட்டிலும் 20,011 இடங்கள் கூடுதலாக இணைக்கப்பட்டன.
முதல் சுற்று: ஜூலை 20-ல் தொடங்கிய முதல் சுற்றில் 43,275 மாணவர்கள் கலந்துகொண்ட நிலையில், 28,979 மாணவர்கள் (66.9%) மட்டுமே சேர்க்கை பெற்றனர்.
இரண்டாம் சுற்று: ஆகஸ்ட் 3-ல் தொடங்கிய இரண்டாம் சுற்றில் 93,117 மாணவர்கள் கலந்துகொண்டு 59,951 பேர் சேர்க்கை பெற்றனர்.
மூன்றாம் சுற்று: 1,02,719 மாணவர்கள் பங்கேற்ற இசுற்றில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 2,450 இடங்கள் உட்பட மொத்தம் 55,365 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
கல்லூரிகளின் சேர்க்கை சரிவு கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை விகிதம் பின்ைடைவை சந்தித்துள்ளது:
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் 3 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை (0% சேர்க்கை).
100% மாணவர் சேர்க்கை பெற்ற கல்லூரிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 39 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 30 கல்லூரிகளாகக் குறைந்துள்ளது (இதில் 22 அரசு கல்லூரிகள் என்பது குறிப்பிடத்தக்கது).
90 சதவீதத்திற்கு மேல் இடங்கள் நிரம்பிய கல்லூரிகள் கடந்த ஆண்டு 164-ஆக இருந்தது, இந்த ஆண்டு 112 ஆகக் குறைந்துள்ளது.
கம்ப்யூட்டர் சயின்ஸ் வீழ்ச்சியும், கோர் இன்ஜினியரிங் எழுச்சியும் மாணவர்களின் விருப்பப் பாடப் பிரிவுகளில் இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்து வந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் (Computer Science) கலையின் ஆதிக்கம் சற்று குறையத் தொடங்கியுள்ளது. ஐ.டி துறையில் நிலவும் வேலைவாய்ப்பு குறைவு காரணமாக, மாணவர்கள் மீண்டும் கோர் இன்ஜினியரிங் (Core Engineering) படிப்புகளின் பக்கம் திரும்பியுள்ளனர்.
நடப்பாண்டு மாணவர்களின் துறை வாரியான விருப்பம்:
கம்ப்யூட்டர் சயின்ஸ்: 39,708 மாணவர்கள்
இ.சி.இ (ECE): 28,057 மாணவர்கள்
ஏ.ஐ (AI – செயற்கை நுண்ணறிவு): 24,695 மாணவர்கள்
ஐ.டி (IT): 19,676 மாணவர்கள்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்: 16,731 மாணவர்கள்
இ.இ.இ (EEE): 14,700 மாணவர்கள்
மண்டலவாரியாகப் பார்க்கும்போது, கோவையில் 79% இடங்களும் (58,070), சென்னையில் 74.46% இடங்களும் (45,092), Trichy-ல் 68.24% இடங்களும் நிரம்பி முதலிடத்தில் உள்ளன.
கல்வியாளரின் ஆலோசனைகள் இதுகுறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவிக்கையில், “சாய்ஸ் ஃபில்லிங் (Choice Filling) செய்வதில் மாணவர்களிடையே விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ளது. மதிப்பெண் பெற்றும் கூட முறையான வழிகாட்டுதல் இல்லாததால் பல மாணவர்கள் அடுத்தடுத்த சுற்றுகளுக்குச் செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர்.
மேலும், மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப கல்லூரிகளின் பாடத்திட்டங்கள் மற்றும் கற்பித்தல் முறைகள் முற்றிலும் மாற்றப்பட வேண்டும். குறிப்பாக, தன்னாட்சிக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கும் முன்பு அவற்றின் உள்கட்டமைப்பு, ஆசிரியர் தகுதி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கும் திறன் ஆகியவற்றை அண்ணா பல்கலைக்கழக மானியக்குழு தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தன்னாட்சி அதிகாரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.
கல்லூரியின் உள்கட்டமைப்பு, கட்டணம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவையே மாணவர்களின் முதன்மைக் காரணியாக விளங்குவதால், கல்லூரிகள் இவைகளை மேம்படுத்தினால் மட்டுமே பொறியியல் கல்வியின் மீது மாணவர்களின் ஆர்வத்தை மீண்டும் உயர்த்த முடியும் என்பதே கல்வியாளர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது.
