தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் மாறிவரும் அரசியல் சூழலில், மாபெரும் பாரம்பரியம் கொண்ட திராவிட இயக்கமான திமுக தன் பலத்தை இழந்து காங்கிரஸ் கட்சியைப் போல பலவீனமாகிவிடக் கூடாது என்று பாதர் ஜகத் கஸ்பர் எச்சரித்துள்ளார். தவெக-வை எதிர்த்து ஆவேசப்படும் மட்டமான அரசியலை விடுத்து, கட்சியை அடிமட்டத்திலிருந்து கட்டமைக்க வேண்டும் என தனது கருத்துக்களை முன்வைத்துள்ளாா். 
காளான் அல்ல திமுக; ஆனால் சறுக்கலுக்குக் காரணமென்ன?
திமுக என்பது நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அல்ல என்றும், தந்தை பெரியாரின் சமூக நீதி வேர்களைக் கொண்ட ஒரு மாபெரும் பாரம்பரிய இயக்கம் என்றும் பாதர் ஜகத் கஸ்பர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், சமகாலப் போதாமைகள் மற்றும் சாமானிய மக்களுக்கான சேவைகளில் ஏற்பட்ட தொய்வு காரணமாகவே கட்சி தற்போது பெரும் சவாலைச் சந்தித்துள்ளது. காங்கிரஸ் கட்சியைப் போல திமுகவும் படிப்படியாக தன் செல்வாக்கை இழந்துவிடக் கூடாது என்றால், இழந்த இடத்தைக் குறித்து கவலைப்படுவதை விட்டுவிட்டு, தனது அடிப்படைக் கட்டமைப்பை (Fundamentals) உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தவெக மீதான ஆவேசமும் ‘ஜிகர்தண்டா’ அரசியலும்
புதிதாகக் களமிறங்கியுள்ள தவெக-வை எதிர்த்து ஆவேசப்படுவதும், அவர்களைக் கண்டு பயந்து எதிர்ப்பதும் முதிர்ச்சியற்ற செயலாகும். தவெக செய்யும் ஒவ்வொரு செயலையும் கண்மூடித்தனமாக எதிர்ப்பதை விட்டுவிட்டு, அவர்கள் செய்யும் ஆக்கப்பூர்வமான விஷயங்களை ஏற்றுக்கொண்டு முதிர்ச்சியான முறையில் செயல்பட வேண்டும். அதை விடுத்து மேலோட்டமான ‘ஜிகர்தண்டா’ வேலைகளில் கவனம் செலுத்தினால் கட்சிக்கு எதிர்காலம் இருக்காது என்றும் அவர் விமர்சித்தார்.
அடிமட்டத் தொண்டர்களின் பலவீனம் மற்றும் மாற்றப்பட வேண்டிய வியூகங்கள்
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த திமுகவின் எழுச்சி இன்று களத்தில் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், ஒவ்வொரு ஊரிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்களைச் திரட்டும் அந்த இயல்பான பலம் (Genetic Muscle) தற்போது பலவீனமடைந்துள்ளது என்றார். டெல்லியில் இருந்து இயக்கப்படும் அதிகார மையங்களும், பெருகிவிட்ட முறைகேடுகளும் மக்களின் அதிருப்தியைச் சம்பாதித்துள்ளன. உண்மையான போராளிகளையும் பக்குவப்பட்ட நிர்வாகிகளையும் கொண்டு கட்சியைச் செப்பனிடாமல், மேலோட்டமான மாற்றங்களைச் செய்வதால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை என்று அவர் எச்சரித்தார்.
மாறப்போகும் தமிழக அரசியல் களம்
வரும் காலங்களில் தமிழக அரசியல் களம் மிக ஆக்ரோஷமான மற்றும் எதிர்பாராத திருப்புமுனைகளைச் சந்திக்கக் காத்திருக்கிறது. அதிமுக தனது பழைய தலைவர்களை இணைப்பதோடு இளம் தலைமுறையினருக்கு வழிவிட வேண்டும். இதுவரை கண்டுகொள்ளப்படாமல் விளிம்புநிலையில் இருந்த மக்களையும், புதிய அரசியல் சக்திகளையும் அரவணைத்துச் செல்லும் கட்சிகளே எதிர்காலத்தில் வெற்றி பெற முடியும் என்பதே பாதர் ஜகத் கஸ்பர் அளித்த முக்கிய எச்சரிக்கையாகும்.
