தமிழகத்தில் 2025-26 பருவத்திற்கான நெல் கொள்முதல் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து புதிய சாதனை படைத்துள்ளது. தமிழக அரசு நிறுவனங்கள் மூலம் மொத்தம் 64.2 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.


கடந்த 2024-25 பருவத்தில் 47.98 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு 16.22 லட்சம் மெட்ரிக் டன் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 34 சதவீத உயர்வாகும்.
எதனால் கொள்முதல் அதிகரித்தது?
விவசாயிகளுக்கு கிடைத்த உறுதியான ஆதரவு விலை, சாதகமான வானிலை மற்றும் அணைகளில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதன் காரணமாக நெல் சாகுபடி பரப்பளவு அதிகரித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அரசு நேரடி கொள்முதல் மையங்களில் நெல்லை விற்பனை செய்வது விவசாயிகளுக்கு அதிக பயனுள்ளதாக மாறியதும் கொள்முதல் அளவு அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
நெல் கொள்முதல் விலை எவ்வளவு?
2026-27 பருவத்திற்காக நெல் கொள்முதலில் மாநில அரசு வழங்கும் ஊக்கத்தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.
நல்ல ரக நெல்லுக்கான மாநில ஊக்கத்தொகை குவிண்டாலுக்கு ₹156-ல் இருந்து ₹289 ஆகவும், பொது ரக நெல்லுக்கான ஊக்கத்தொகை ₹131-ல் இருந்து ₹159 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி நல்ல ரக நெல்லுக்கு மொத்த கொள்முதல் விலை ₹2,750 ஆகவும், பொது ரக நெல்லுக்கு ₹2,600 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசின் கையிருப்பில் எவ்வளவு அரிசி கிடைக்கும்?
64.2 லட்சம் மெட்ரிக் டன் நெல்லில் இருந்து சுமார் 42.44 லட்சம் மெட்ரிக் டன் அரிசி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் பொது விநியோகத் திட்டத்திற்கு ஆண்டுக்கு சுமார் 33.36 லட்சம் மெட்ரிக் டன் அரிசி தேவைப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு கிடைக்கும் அரிசி கையிருப்பு, மாநிலத்தின் வருடாந்திர தேவையை விட சுமார் 9 லட்சம் டன் அதிகமாக இருக்கும்.
மத்திய அரசை சார்ந்திருப்பது குறையுமா?
நெல் கொள்முதல் அதிகரித்துள்ளதால், தமிழகத்தின் அரிசி கையிருப்பு வலுவடையும். இதன் மூலம் பொது விநியோகத் திட்டத்திற்காக மத்திய அரசிடமிருந்து கூடுதலாக அரிசி வாங்க வேண்டிய செலவு குறைய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கையிருப்பில் இருக்கும் உபரி அரிசி எதிர்கால தேவைக்காக சேமித்து வைக்கப்பட உள்ளது.
செப்டம்பர் 1 முதல் புதிய கொள்முதல் சீசன்!
2025-26 பருவத்தில் சாதனை அளவில் நெல் கொள்முதல் முடிந்துள்ள நிலையில், 2026-27 காரீஃப் சந்தைப்படுத்தல் பருவத்திற்கான நெல் கொள்முதல் செப்டம்பர் 1 முதல் தமிழகத்தில் தொடங்க உள்ளது.
திருத்தப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை அமலுக்கு வரும் அதே நாளில் புதிய கொள்முதல் பருவமும் தொடங்குகிறது. இதனால் அடுத்த பருவத்திலும் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் தீவிரமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் நெல் கொள்முதல் 64.2 லட்சம் டன்னாக உயர்ந்திருப்பது விவசாய உற்பத்தி மற்றும் மாநிலத்தின் உணவு தானிய கையிருப்பு இரண்டிலும் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
