தமிழகத்தில் நீண்ட நேரம் நின்று பணியாற்றும் காவலர்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளுக்குத் தீர்வாக,
அரசு மருத்துவமனைகள் மூலம் மாதம் ஒருமுறை ஆயுர்வேத மசாஜ் சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் காவல் துறை மற்றும் மருத்துவம் சார்ந்த விவாதங்களின்போது கோரிக்கையை முன்வைத்துப் பேசிய அவர் கூறியதாவது:
தமிழகத்தில் காவல்துறையில் பணிபுரியும் ஆளினர்கள் பல மணி நேரம் தொடர்ந்து நின்றுகொண்டே பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இத்தகைய நீண்ட நேர நிற்பதால் ஏற்படும் உடல் உழைப்பு மற்றும் அழுத்தத்தினால் பல காவலர்களுக்குக் கால்களில் ‘நரம்பு சுரட்டல் நோய்’ (Varicose Veins) உள்ளிட்ட கடுமையான உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
எனவே, காவல் துறையினரின் உடல்நலனைக் பேணிக் காக்கும் வகையிலும், அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கும் வகையிலும் அரசு மருத்துவமனைகள் மூலம் மாதம் ஒருமுறை ஆயுர்வேத மசாஜ் சிகிச்சை வழங்கத் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
சட்டப்பேரவையில் காவல் துறையினரின் பணிச்சுமை மற்றும் உடல்நலம் குறித்து பெண் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ஆயுர்வேத சிகிச்சை கோரி விடுத்த இந்த வித்தியாசமான கோரிக்கை அவையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
