தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கோவில்களின் வருடாந்திர வரவு, செலவு கணக்குகளின் தணிக்கை அறிக்கைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களின் வருடாந்திர வரவு செலவு கணக்கு தணிக்கை அறிக்கைகளைத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடக் கோரி டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் இ.மனோகரன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் தணிக்கை செய்யப்பட்ட கணக்கு விவரங்களை நீதிமன்றத்தில் விளக்கினார்:
தமிழகம் முழுவதும் உள்ள 4,292 கோவில்களின் வரவு, செலவு கணக்குகளின் தணிக்கை அறிக்கைகள் ஏற்கனவே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டன.
இந்தத் தணிக்கை அறிக்கைகளைப் பொதுமக்கள் அனைவரும் அறநிலையத்துறை இணையதளம் மூலம் பார்வையிட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், 10,000 ரூபாய்க்கும் குறைவான ஆண்டு வருமானம் ஈட்டும் கோவில்களின் கணக்குகள் தணிக்கை செய்யப்படமாட்டாது என்றும் அறநிலையத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளனர்.
