“சட்டமன்றம் மழலையர் பட்டாளம் ஆகிவிட்டது” – மதுரையில் அதிமுக மூத்த தலைவர் கிண்டல்
தமிழ்நாட்டின் சட்டமன்றம் தற்போது மழலையர் பட்டாளம் போல மாறியிருப்பதாக சாடியுள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ, முதலில் தவெகவினருக்கு முறையாகத் தமிழ் கற்றுக்கொடுக்க வேண்டும் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

“தமிழில் பேசவும் வாசிக்கவும் தெரியவில்லை”
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ கூறியதாவது:
“சட்டமன்றம் என்பது கம்பீரமான தமிழ் மன்றம் ஆனால், இன்றைய சூழலில் அமைச்சருக்கே தமிழில் தெளிவாகப் பதில் சொல்லவும், சட்டமன்ற குறிப்புகளை வாசிக்கவும் தெரியவில்லை. சட்டமன்றம் முற்றிலும் மழலையர் பட்டாளம் போல ஆகிவிட்டது. அதற்குத் தலைமை தாங்குபவரும் அதே லட்சணத்தில்தான் இருக்கிறார்.
தமிழ் மொழி பற்றிப் பேசுவதற்கு முன்பு, முதலில் தவெகவினருக்குச் சரியாகத் தமிழ் கற்றுக்கொடுங்கள்” எனச் செல்லூர் ராஜூ சாடினார்.
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
சட்டமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற விவாதங்கள் மற்றும் அமைச்சர்களின் பதில்கள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், செல்லூர் ராஜூவின் இந்த காரசாரமான கருத்துகள் அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
