சென்னையில் கடந்த 15 நாட்களாக போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை முதலமைச்சர் சந்திக்க மறுப்பது குறித்து தமிழகச் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார்.


எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது:
ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் தூய்மைப் பணியாளர்களுக்குப் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு ஆகியவை முக்கிய அம்சங்களாக இருந்தன. இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 15 நாட்களாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
ஏற்கனவே இது குறித்து அவையில் அமைச்சரிடம் முறையிட்டபோது, விரைவில் தீர்வு எட்டப்படும் என்றார். ஆனால் இதுவரை சுமுக முடிவு எட்டப்படவில்லை. எதிர்க்கட்சியாக இருந்தபோது இதே தூய்மைப் பணியாளர்களைத் தனது கட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்து சந்தித்த இன்றைய முதலமைச்சர், இப்போது ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களை நேரடியாகச் சந்தித்துப் பேச மறுப்பது ஏன்? தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை முதலமைச்சர் எப்போது நிறைவேற்றுவார்?
அமைச்சர் ராஜ்மோகன் அளிக்கம் பதில்:
போராடும் தொழிலாளர்களின் சிரமங்களை இந்த அரசு நன்கு உணர்ந்துள்ளது. அவர்களின் பல கோரிக்கைகள் தொடர்பான கோப்புகள் தயார் நிலையில் உள்ளன. ஆனால் பிரதான கோரிக்கைகளில் நிர்வாகச் சிக்கல்கள் மற்றும் கடுமையான நிதி நெருக்கடிகள் நிலவுகின்றன.
பல்வேறு சங்கங்கள் இருப்பதால் அனைவரையும் ஒன்றிணைத்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. முந்தைய ஆட்சிக் காலத்தில் இதே பணியாளர்கள் 100 முதல் 150 நாட்கள் வரை வீதியில் இறங்கி போராடினார்கள். அப்போதைய ஆட்சியில் ரிப்பன் மாளிகைக்குள் கூட அனுமதிக்கப்படாமல் நடைபாதையில் போராடிய தொழிலாளர்களை, தற்போதைய அரசு வளாகத்திற்குள்ளேயே ஜனநாயக முறையில் போராட அனுமதித்துள்ளது. தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளுடன் இருமுறை விரிவாகப் பேசப்பட்டுள்ளது. அரசு ஆவணங்கள் தயாராக உள்ளதால் விரைவில் சுமுக தீர்வு காணப்படும்.
மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி எழுப்பிய கேள்விகள்:
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீண்டும் குறுக்கிட்டுப் பேசுகையில், “எங்கள் ஆட்சிக்காலத்தில் போராட்டம் நடந்தபோது அப்போதைய அமைச்சர்களும் மேயரும் தொடர்ந்து போராட்டக்களத்திற்கு நேரடியாகச் சென்று தூய்மைப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், தற்போதைய ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட போராட்டக்களத்திற்குச் சென்று அவர்களைச் சந்திக்கவில்லை. முந்தைய ஆட்சியில் 100 நாட்கள் போராட்டம் நடந்ததைச் சுட்டிக்காட்டும் அரசு, தற்போதும் 100 நாட்கள் கடக்கும் வரை காத்திருக்கப் போகிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.
இந்த காரசார விவாதத்தின்போது முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் நேரடியாக அமர்ந்திருந்தபோதிலும், அவர் பதில் அளிக்காமல் அமைச்சர் ராஜ்மோகனே அரசின் சார்பாக விளக்கமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
