Homeசெய்திகள்தமிழ்நாடு"சட்டம் இருக்கிறது, ஒழுங்கு இல்லை!" - தமிழக அரசை விளாசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!

“சட்டம் இருக்கிறது, ஒழுங்கு இல்லை!” – தமிழக அரசை விளாசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!

-

- Advertisement -

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் விஜய் விதி எண் 110-ன் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்க வலியுறுத்தும் தனித் தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து, காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அரசின் செயல்பாடுகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்."சட்டம் இருக்கிறது, ஒழுங்கு இல்லை!" - தமிழக அரசை விளாசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!

திமுக ஆட்சியின் சாதனைகளை ஒப்புக்கொண்ட காவல்துறை கொள்கை விளக்கம்!
சட்டப்பேரவையில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நலப் பிரச்சனைகள் குறித்து எழுப்பும் கேள்விகளுக்கு அரசு திசைதிருப்பவோ அல்லது பழிவாங்கும் நடவடிக்கைகளிலோ ஈடுபடாமல் உரிய பதிலளிக்கும் என நம்புவதாகத் தெரிவித்தார். மேலும், “இந்த அரசு தாக்கல் செய்துள்ள காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்பில், முந்தைய திராவிட மாடல் ஆட்சியில் குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக 2024-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2025-இல் சாதிய பாகுபாடு கொலைகள் குறைந்திருப்பதாக நீங்களே ஒப்புக்கொண்டுள்ளீர்கள். எங்கள் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்ததை ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி” என்று குறிப்பிட்ட அவர், கடந்த ஐந்தாண்டு காலத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு முன்னணியில் திகழ்ந்ததையும் சுட்டிக்காட்டினார்.

we-r-hiring

“தமிழ்நாடு டாப் கியரில் இருந்து ரிவர்ஸ் கியருக்கு செல்கிறது”
புதிய அரசு பொறுப்பேற்று 116 நாட்கள் மட்டுமே ஆன நிலையில், புதிய திட்டங்களை உருவாக்குவதை விட முந்தைய அரசு கொண்டுவந்த பல திட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக உதயநிதி குற்றம் சாட்டினார். இதுகுறித்து அவர் மேலும்ுகையில், “எங்கள் ஆட்சியில் தமிழ்நாடு வளர்ச்சியில் ‘டாப் கியரில்’ சென்றுகொண்டிருந்தது; ஆனால் இந்த அரசு வந்தபிறகு ‘ரிவர்ஸ் கியரில்’ செல்கிறது. பரந்தூர் விமான நிலையம், காஞ்சிபுரம் புதுநகர் திட்டம், நாமக்கல் சிப்காட், பரந்தூர் மெட்ரோ, ஈசிஆர் மேம்பாலம் மற்றும் மாமல்லன் நீர் தேக்கம் என திட்டங்களை ரத்து செய்யும் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. தேர்தல் வாக்குறுதிகளான முழு விவசாயக் கடன் தள்ளுபடி, வருடத்திற்கு 6 சிலிண்டர் மற்றும் பேருந்துகளில் பெண்களுக்குக் கட்டணமில்லா பயணம் போன்றவற்றை முழுமையாக நிறைவேற்றாமல் பாதியிலேயே அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்” என்றார்.

“தாய்மாமன் காது குத்து திட்டம்” – கிண்டல் மற்றும் இஸ்லாமிய சிறைவாசிகள் கோரிக்கை
அரசின் புதிய அறிவிப்புகளைச் சாடிய அவர், “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் என்று கூறிவிட்டு, இப்போது அனைத்துத் திட்டங்களுக்கும் சேர்த்து ‘தாய்மாமன் காது குத்து திட்டம்’ என்று பெயர் வைக்கலாம் போலிருக்கிறது. மக்களிடம் திட்டங்கள் சேர்வதை விட, ரீல்ஸ்கள் போய் சேர்ந்தால் போதும் என்ற நிலையில்தான் இந்த ஆட்சி செயல்படுகிறது” என்று விமர்சித்தார். மேலும், இஸ்லாமிய சமூகத் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆட்சியில் நீண்டகாலமாகச் சிறையில் வாடிய இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு பரோல் மற்றும் விடுப்பு வழங்கப்பட்டதை நினைவுபடுத்திய அவர், தற்போதைய அரசும் அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

“116 நாள் ஆட்சியில் 10 ஆணவக் கொலைகள்” – சட்டம்-ஒழுங்கு சீர்கேடு குற்றச்சாட்டு
தற்போதைய ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு வீழ்ச்சியடைந்துவிட்டதாகக் குறிப்பிட்ட உதயநிதி, தினமும் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமைச் செய்திகள் வருவதாக வேதனை தெரிவித்தார். “இன்றைக்கு சட்டம் இருக்கிறது, ஆனால் ஒழுங்கு இல்லை. இது வெறும் குற்றச்சாட்டு அல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் நிலைமை. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் கோவையில் 9 கொலைகள் நடந்துள்ளன. ஆட்சி அமைந்துவிட்ட இந்த 116 நாட்களில் 10 ஆணவக் கொலைகள் அரங்கேறியுள்ளன; ஆனால் இது குறித்து முதல்வர் இதுவரை வாய் திறக்கவில்லை. கறிக்கடைகளில் கூட இந்தளவுக்கு வெட்டமாட்டார்கள், அந்த அளவிற்குத் தினசரி வெட்டுக்குத்துகள் நடக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சட்டம்-ஒழுங்குப் பிரச்சனைக்கு அரசை விமர்சித்து ஆட்சிக்கு வந்தவர்கள், இப்போது தனிநபர் ஒழுக்கம் என்று பாடம் எடுப்பதுடன், ஆளுங்கட்சியினரே தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகிவிட்டது” என்று கடுமையான குற்றச்சாட்டுகளுடன் தனது உரையை நிறைவு செய்தார்.

சமமற்ற கல்வியில் பொதுத் தேர்வு நியாயமா? – நீட் தேர்வுக்கு எதிராகத் தகிக்கும் தமிழக மாணவர் அமைப்புகள்!

MUST READ