சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 14 நாட்களாக நடைபெற்று வந்த தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டம் இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது. அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்களின் முக்கிய கோரிக்கைகளில் 5 கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. நிறைவேற்றக்கூடிய கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
அரசு அளித்த முக்கிய உறுதிமொழிகள்:
1. உணவுப்படி வழங்கப்படும்
தூய்மைப் பணியாளர்களுக்கு அடுத்த மாதம் முதல் உணவுப்படி வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
2. 197 வார்டுகளிலும் கழிப்பறைகள்
சென்னை மாநகராட்சியின் 197 வார்டுகளிலும் தூய்மைப் பணியாளர்களின் பயன்பாட்டுக்காக கழிப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
3. போராட்ட வழக்குகள் வாபஸ்
போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்
மழைக்காலத்தை கருத்தில் கொண்டு ரெயின்கோட், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை அக்டோபர் 10-ம் தேதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
5. உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்
பணியின்போது உயிரிழந்த 7 தூய்மைப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உறுதி அளித்துள்ளது.
இதுதவிர, மகப்பேறு விடுப்பு மற்றும் வார விடுப்பு தொடர்பான கோரிக்கைகள் குறித்தும் ஆலோசித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணிகளை மேம்படுத்தும் வகையில் 300 புதிய வாகனங்களை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை அக்டோபர் 3-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தரப்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளைத் தொடர்ந்து, 14 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை தூய்மைப் பணியாளர்கள் இன்று வாபஸ் பெற்றுள்ளனர்.
காவல் நிலைய சிசிடிவி பதிவுகள்: தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
