தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டம்-ஒழுங்கு தொடர்பான விவாதம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறை மற்றும் தீயணைப்பு–மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் த.வெ.க. அரசை கடுமையாக விமர்சித்தார்.


த.வெ.க. அரசு பொறுப்பேற்று 116 நாட்களில் சுமார் 550 தீவிர குற்றச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக உதயநிதி குற்றம்சாட்டினார்.
என்னென்ன குற்றங்களை சுட்டிக்காட்டினார்?
உதயநிதி முன்வைத்த தகவலின்படி, அந்த 550 சம்பவங்களில் சுமார் 200 கொலைகள், 300 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், 8 காவல் அல்லது சிறைக் காவல் மரணங்கள் மற்றும் 10 ஆணவக் கொலைகள் இடம்பெற்றுள்ளதாக கூறினார்.
சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் அரசு உரிய கவனம் செலுத்தவில்லை என்றும், உளவுத்துறை செயல்பாட்டிலும் தோல்வி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
மேலும், ஆளும் கட்சியைச் சேர்ந்த சில நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தபோதும், அவர்கள் மீது போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் உதயநிதி கேள்வி எழுப்பினார்.
த.வெ.க. தரப்பில் பதிலடி
உதயநிதியின் குற்றச்சாட்டுகளுக்கு ஆளுங்கட்சி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக தூத்துக்குடியில் நடைபெற்ற பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக, புகார் வந்தவுடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றம்சாட்டப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார்.
குற்றச்சாட்டுக்கு உள்ளான த.வெ.க. நிர்வாகி கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு தொடர்பு இல்லை என தெரியவந்ததாகவும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.
இதனால் சட்டப்பேரவையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
“திங்கள்கிழமை பதில் சொல்கிறேன்” – விஜய்
உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய் காவல்துறையையும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையையும் கவனித்து வருவதால், எதிர்க்கட்சியின் கேள்விகளுக்கு அவரே நேரடியாக பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், முதல்வருக்கு மூன்று நாட்கள் அவகாசம் இருப்பதாகவும், அனைத்து கேள்விகளுக்கும் தயாராகி வந்து பதிலளிக்க வேண்டும் என்றும் உதயநிதி கூறினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் விஜய், எதிர்க்கட்சியினர் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் செப்டம்பர் 7, திங்கள்கிழமை தெளிவான பதில் அளிப்பதாக தெரிவித்தார். யாரும் அவையை விட்டு ஓடிவிடக்கூடாது என்றும் அவர் கூறியதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
அதற்கு உடனடியாக பதிலடி கொடுத்த உதயநிதி, முதல்வர் அவையில் இருந்து வெளியேறியதை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.
இதனால், வரும் திங்கள்கிழமை சட்டப்பேரவையில் நடைபெறவுள்ள முதல்வர் விஜய்யின் பதிலுரை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
116 நாட்களில் 550 குற்றங்கள் என்ற எண்ணிக்கை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் முன்வைத்த குற்றச்சாட்டு ஆகும். இதற்கு அரசு தரப்பில் மறுப்பு மற்றும் விளக்கங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனது தோட்டத்திலேயே மின்வயர்களை திருடிவிட்டனர்!” – தவெக அரசை சாடிய எடப்பாடி பழனிசாமி
