25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமியச் சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் அல்லது அவர்களுக்கு ‘ஃபர்லாங்’ முறையில் நீண்டகால விடுப்பு வழங்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் (த.மு.மு.க) 32-வது துவக்க விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்ட இலவச பொது மருத்துவ முகாமினைத் தொடங்கி வைத்த பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

இஸ்லாமியச் சிறைவாசிகள் விடுதலை & முதலமைச்சரின் அதிகாரம்
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜவாஹிருல்லா, “25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய அரசு முன்வர வேண்டும். சிறைவாசிகள் விடுதலை தொடர்பான கோப்பில் தலைமைச் செயலாளர் கையெழுத்திடவில்லை என்றாலும், முதலமைச்சருக்கு முழு அதிகாரம் உள்ளது. அவரே கோப்பைத் திரும்பப் பெற்று கையெழுத்திட்டு விடுதலை நடவடிக்கைகளை விரைவுபடுத்தலாம்” எனக் கூறினார்.

மேலும், உச்சநீதிமன்றத்தில் இஸ்லாமியச் சிறைவாசிகள் விடுதலை குறித்து அரசு சார்பில் தவறான பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டது சில அதிகாரிகளின் தன்னிச்சையான செயல்தான் என்றும், அது அரசின் நிலைப்பாடு அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார். இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
‘சிங்கப்பெண்’ காவல் பிரிவு வெறும் அலங்காரப் படை!
பெண்களின் பாதுகாப்புக்காகத் தொடங்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ காவல் பிரிவுக்குப் போதிய அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டிய அவர்:
“சிங்கப்பெண் பிரிவினர் குற்றவாளிகளைக் கைது செய்தாலும், அவர்களால் நேரடியாக வழக்குப்பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது. மீண்டும் அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்றுதான் வழக்குப்பதிவு செய்ய வேண்டியுள்ளது. இதனால் அந்தப் பிரிவு வெறும் அலங்காரப் படையாக மட்டுமே செயல்படுகிறது. குழந்தைகளுக்கு எதிரான போக்சோ குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சிறார்களின் வழக்குகளை விசாரிக்கத் தனிப்பிரிவு அமைத்து அதிகாரம் வழங்க வேண்டும்” என முதலமைச்சருக்குக் கோரிக்கை வைத்தார்.
டெல்டாவை வறட்சி பகுதியாக அறிவிக்க வலியுறுத்தல்!
காவிரி டெல்டா நிலவரம் குறித்துப் பேசிய அவர், தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் குறுவை சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பா சாகுபடிக்கும் தண்ணீர் கிடைக்காத சூழல் உள்ளதாகவும் கவலை தெரிவித்தார். எனவே, பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களைப் உடனடியாக வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவித்து, விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
