நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய சூழலில் நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 15 சதவீதம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி குற்றஞ்சாட்டியுள்ளார்.


3-ம் கட்டமாக தீவிர திருத்தப் பணி: நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இருகட்டங்களாக 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த எஸ்ஐஆர் பணி வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, தற்போது 3-ம் கட்டமாக 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரின் குற்றச்சாட்டு: இந்த எஸ்ஐஆர் பணி தொடர்பாக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
“தற்போதைய சூழலில் நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 15% பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். இந்திய மக்கள் தொகை ஆணையத்தால் கூட செய்ய முடியாத ஒரு சாதனையைத் தேர்தல் ஆணையம் செய்து முடித்திருக்கிறது. அதாவது, நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 15 சதவீதத்தை தேர்தல் ஆணையம் குறைத்துள்ளது. எனவே, இந்த எஸ்ஐஆர் பணி முறையாக நடைபெறவில்லை என்றே நான் கருதுகிறேன்” எனக் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தற்போது நாட்டின் அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
