சம்பவம் பற்றிய விவரங்கள்: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர், செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் இறையன்பு (26). இவர் கடந்த செப்டம்பர் 7 அன்று நள்ளிரவில் காட்டாங்குளத்தூரில் உள்ள துலுக்கானத்தம்மன் கோயில் திருவிழாவிற்குச் சென்றுவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.


விபத்து நடந்த விதம்: ஜி.எஸ்.டி. சாலை, காட்டாங்குளத்தூர் சிக்னல் அருகில் மேற்கு திசையிலிருந்து கிழக்கு நோக்கி சாலையைக் கடக்க முயன்றபோது, செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த தமிழக சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்குச் சொந்தமான மாருதி எர்டிகா கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. அமைச்சருக்கு அரசு கொடுத்த வாகனத்தில் அமைச்சர் தலைமைச் செயலகம் நோக்கி வந்து கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. முதலில் அமைச்சரின் அரசு வாகனமும் பாதுகாப்பு வாகனமும் வந்த நிலையில், அவருக்குச் சொந்தமான வாகனம் பின் தொடர்ந்து வரும் பொழுது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனை அனுமதி மற்றும் பலி: இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை, பொதுமக்களின் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிங்கப்பெருமாநல்லூர் அரசு அவசர சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

காவல்துறை நடவடிக்கை: விபத்து குறித்து உயிரிழந்தவரின் தந்தை சிவகுமார் அளித்த புகாரின் அடிப்படையில், தாம்பரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் பிரிவுகள் 281 மற்றும் 106(1)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், காரை ஓட்டி வந்த மதுரை கொடிகுளம் பகுதியைச் சேர்ந்த சின்ன அக்னி (28) என்பவரைக் கைது செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
