Homeசெய்திகள்மாவட்டம்வேலூர் அருகே கட்டடச் சாரம் சரிந்து தேவாலயம் இடிந்து விபத்து! 2 தொழிலாளர்கள் பலி –...

வேலூர் அருகே கட்டடச் சாரம் சரிந்து தேவாலயம் இடிந்து விபத்து! 2 தொழிலாளர்கள் பலி – மீட்புப் பணிகள் தீவிரம்!

-

- Advertisement -

வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த மஞ்சு கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சி.எஸ்.ஐ சியோன் மலை தேவாலய நிர்வாகத்தின் சார்பில் போதகர் ஜோன் கிருபாகரன் என்பவரால் புதிதாக பெரிய தேவாலயம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

we-r-hiring

இன்று மாலை வேளையில், மேல் தளத்திற்கான கான்கிரீட் போடும் பணியில் 12-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சாரம் சரிந்து, சென்டரிங் கட்டுமானம் மொத்தமாக இடிந்து விழுந்தது. இதில் கான்கிரீட் கலவை மற்றும் இடிபாடுகளுக்குள் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் அலறினர்.

சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்பு முயற்சியில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவலம் காவல் நிலைய போலீஸாரும், தீயணைப்பு வீரர்களும் தீவிர மீட்புப் பணியில் இறங்கினர்.

மருத்துவமனையில் அனுமதி: இடிபாடுகளில் இருந்து 8 பேர் விரைவாக மீட்கப்பட்டனர். அவர்களில் 4 பேர் வேலூர் சி.எம்.சி தனியார் மருத்துவமனையிலும், 4 பேர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2 பேர் உயிரிழப்பு – தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு: இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இடிபாடுகளுக்குள் ஒருவர் சிக்கியுள்ளதாகக் கூறப்படுவதால் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

தொடர்ந்து மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பும் சோகமும் நிலவி வருகிறது.

கூடுதல் கொள்ளை தான் மாற்றமா? – ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

MUST READ