மாற்று இடங்களில் சிலைகளைக் கரைப்பது குறித்து விளக்கமளிக்கத் தமிழக அரசுக்கு ஆணையிட்டு விசாரணை ஒத்திவைப்பு.
சுற்றுச்சூழல் மற்றும் கடலோர மண்டலப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பட்டினம்பாக்கம் மற்றும் நீலாங்கரை கடற்கரைப் பகுதிகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்க அனுமதிக்க முடியாது எனத் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடியாகத் தெரிவித்துள்ளது.

வழக்கின் பின்னணி:
கடந்த 2023-ஆம் ஆண்டு சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், “அரசு அறிவிக்காத நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளைக் கரைப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக, பட்டினம்பாக்கம் மற்றும் நீலாங்கரை கடற்கரைகள் ஆமைகளின் இனப்பெருக்க மண்டலங்களாகவும், கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) விதிகளுக்குட்பட்ட உணர்வுப்பூர்வமான பகுதிகளாகவும் திகழ்கின்றன. எனவே, அங்கு சிலைகளைக் கரைக்க அனுமதிக்கக் கூடாது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அரசின் விளக்கம் & பசுமைத் தீர்ப்பாயத்தின் கேள்வி:
இவ்வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், “சென்னையில் காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர், பட்டினப்பாக்கம் மற்றும் நீலாங்கரை ஆகிய 5 இடங்கள் சிலைகளைக் கரைப்பதற்காகப் பாரம்பரியமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இங்கிருந்து சிலைகளை வேறு பகுதிகளுக்கு மாற்றும் போது சட்ட ஒழுங்குப் பிரச்சனைகள், போக்குவரத்து நெரிசல் மற்றும் மதரீதியான பதற்றமான சூழல்கள் உருவாக வாய்ப்புள்ளது.
இவற்றை அரசு கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதனைக் கேட்ட தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம்:
சுற்றுச்சூழல் ரீதியாகப் மிக முக்கியத்துவம் வாய்ந்த பட்டினம்பாக்கம், நீலாங்கரை ஆகிய பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படும் சிலைகளை, மாற்று நீர்நிலைகள் அல்லது பிற கடற்கரைப் பகுதிகளுக்கு ஏன் திருப்பி அனுப்பி வைக்கக் கூடாது?
பட்டினம்பாக்கம் மற்றும் நீலாங்கரைப் பகுதிகளின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் மற்றும் ஆமைகள் பாதுகாப்பு குறித்துப் பொதுமக்களிடம் அரசு தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனக் கேள்வி எழுப்பியது.
விசாரணை தள்ளிவைப்பு:
மேலும், பட்டினம்பாக்கம் மற்றும் நீலாங்கரைக்குச் செல்லும் சிலைகளைச் மாற்று வழிகளில் திருப்பி விடுவது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்துத் தமிழக அரசு விரிவான விளக்கமளிக்க உத்தரவிட்ட பசுமைத் தீர்ப்பாயம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் செப்டம்பர் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கி வரும் வேளையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த அதிரடி உத்தரவு பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
சென்னையில் விடிய விடிய அதிரடி வேட்டை: ஒரே இரவில் 70 ரவுடிகள் கைது!
