அமெரிக்கா–ஈரான் இடையிலான மோதல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உலகின் முக்கியமான கடல் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றி மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஹோர்முஸ் வழியாகச் சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


கப்பல் மீது தாக்குதல்
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற ஒரு கப்பலை நோக்கி projectile தாக்குதல் நடத்தப்பட்டதாக UKMTO தகவல் தெரிவித்துள்ளது. தாக்குதலால் கப்பலுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் அதில் இருந்த பணியாளர்களின் நிலை குறித்து ஆரம்பகட்ட தகவல்கள் முழுமையாக வெளியாகவில்லை.
இந்த சம்பவம் சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.
சவுதி எண்ணெய் குழாய் மூடல்
இதற்கிடையில், சவுதி அரேபியா தனது முக்கியமான East-West எண்ணெய் குழாயை தற்காலிகமாக மூடியுள்ளது. ஈராக்கில் இருந்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழாய் மூலம் தினமும் சுமார் 40 முதல் 50 லட்சம் பேரல் எண்ணெய் கொண்டு செல்லப்பட்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் குறித்த கவலை அதிகரித்துள்ளது.
ஈரான்–ஓமன் இடையே புதிய பேச்சுவார்த்தை
ஒருபுறம் பதற்றம் அதிகரித்து வந்தாலும், மறுபுறம் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த ஈரான் மற்றும் ஓமன் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
ஹோர்முஸ் வழியாக கப்பல்கள் செல்ல புதிய Entry மற்றும் Exit பாதைகள் குறித்து இரு நாடுகளும் உடன்பாட்டை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டம் மற்ற வளைகுடா நாடுகளிடமும் முன்வைக்கப்பட உள்ளது.
ஹோர்முஸ் மீண்டும் திறக்கப்படுமா?
ஹோர்முஸ் நீரிணை உடனடியாக முழுமையாக திறக்கப்படுவது உறுதி செய்யப்படவில்லை. அமெரிக்கா தனது முற்றுகை மற்றும் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்பதையே நீரிணையை மீண்டும் திறப்பதற்கான முக்கிய நிபந்தனையாக ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
எண்ணெய் விலையில் தாக்கம்?
ஹோர்முஸ் பகுதியில் கப்பல் போக்குவரத்து தொடர்ந்து பாதிக்கப்பட்டால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் மேலும் அழுத்தம் ஏற்படலாம். ஏற்கனவே Brent கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலரைத் தாண்டியுள்ள நிலையில், புதிய தாக்குதல் சம்பவங்கள் எரிபொருள் விலை உயர்வு குறித்த கவலையை அதிகரித்துள்ளன.
இதனால் அடுத்த சில நாட்களில் அமெரிக்கா–ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை எந்த திசையில் செல்கிறது, ஹோர்முஸ் வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து எவ்வாறு அமைகிறது என்பதுதான் சர்வதேச சந்தையின் முக்கிய கவனமாக உள்ளது.
