சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் நீண்டகால சிரமத்துக்கு தீர்வு காணும் வகையில், டெர்மினல் 1-க்கு எதிரே ரூ.22.88 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பிக்-அப் பாயின்ட் பிளாசா திறக்கப்பட்டுள்ளது. மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு காணொலி காட்சி மூலம் இந்த புதிய வசதியை திறந்து வைத்தார்.


டெர்மினல் 1-க்கு மிக அருகில் கேப் வசதி
இதுவரை டெர்மினல் 1-ல் விமானத்தில் இருந்து இறங்கும் பயணிகள் கேப் அல்லது வாடகை காரில் செல்ல வேண்டுமெனில், சுமார் 600 மீட்டர் தொலைவில் உள்ள மல்டி லெவல் கார் பார்க்கிங் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. அங்கு லிப்ட் உள்ளிட்ட வசதிகளை பயன்படுத்தி வாகனத்தை அடைய வேண்டியிருந்ததால், குறிப்பாக அதிகமான உடைமைகளுடன் வரும் பயணிகள் சிரமத்தை சந்தித்தனர்.
தற்போது டெர்மினல் 1-ல் இருந்து சுமார் 30 மீட்டர் தொலைவிலேயே பிக்-அப் பாயின்ட் பிளாசா அமைக்கப்பட்டுள்ளது. இதனால் விமானத்தில் இருந்து இறங்கியதும் பயணிகள் மிகக் குறைந்த தூரத்திலேயே கேப் மற்றும் டாக்சி சேவைகளைப் பெற முடியும்.
தினமும் 5,000 கேப்களை கையாளும் திறன்
புதிய பிக்-அப் பாயின்ட் பிளாசாவில் தினமும் சுமார் 5,000 மஞ்சள் நிற வாடகை கார்களை கையாளும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் விமான நிலையத்தின் முன்பகுதியில் கேப்கள் மற்றும் பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், டெர்மினல் முன்பகுதியில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்த்து, ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் வாகன இயக்கம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு பெரும் உதவி
புதிய பிளாசா வசதி குறிப்பாக முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுடன் பயணிக்கும் குடும்பங்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும் என சென்னை விமான நிலைய இயக்குநர் ராஜா கிஷோர் தெரிவித்துள்ளார்.
மல்டி லெவல் கார் பார்க்கிங் வரை நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய அவசியம் குறைவதால், விமான நிலையத்தை பயன்படுத்தும் பல்வேறு தரப்பு பயணிகளுக்கும் இந்த புதிய வசதி சிரமத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெர்மினல்களுக்கு இடையே பேட்டரி வாகனங்கள்
பயணிகள் டெர்மினல்களுக்கும் மல்டி லெவல் கார் பார்க்கிங் பகுதிக்கும் எளிதாக சென்று வருவதற்காக 15 பேட்டரி வாகனங்கள் தொடர்ந்து இயக்கப்பட உள்ளன. குறிப்பாக டெர்மினல் 2 மற்றும் டெர்மினல் 4-ல் இருந்து வரும் பயணிகளுக்கும் இந்த சேவை உதவியாக இருக்கும்.
மேலும், பயணிகளின் உடைமைகளை எளிதாக எடுத்துச் செல்லும் வகையில் பாதுகாப்பு சோதனைக்கு பிந்தைய பகுதிகளில் நவீன டிராலிகளை அறிமுகப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பயணிகள் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு
சென்னை விமான நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் நிலையில், டாக்சி மற்றும் கேப் வாகனங்களை ஒரே இடத்தில் ஒழுங்குபடுத்துவதன் மூலம் டெர்மினல் முன்பகுதியில் ஏற்படும் நெரிசல் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயணிகள் விமான நிலையத்தை விட்டு வெளியேறும் நேரத்தை குறைத்து, அடுத்த கட்ட பயணத்தை விரைவாக தொடங்குவதற்கும் இந்த பிக்-அப் பாயின்ட் பிளாசா உதவும். இதன் மூலம் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அனுபவத்தை மேம்படுத்தும் முக்கிய வசதியாக இது அமையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை முழுவதும் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி! பூ, பழங்கள் விலை உயர்ந்தாலும் உற்சாகம் குறையாத மக்கள்
