கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அலட்சியப் போக்கால், பிரசவித்த பழங்குடியினத் தாய் ஒருவர், தனது பச்சிளம் குழந்தையுடன் நடு இரவில் வனப்பகுதிக்குச் செல்லும் பாதி வழியிலேயே வாகன வசதியின்றித் தவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள ‘குல்லட்டி’ என்ற பழங்குடியினக் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், பிரசவத்திற்காகக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்குப் சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்த நிலையில், மருத்துவமனையிலிருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பொதுவாக, அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களை இலவசமாக வீடுகளுக்கு அழைத்துச் செல்ல ‘102’ மற்றும் ‘108’ ஆம்புலன்ஸ் வாகனம் அல்லது சிறப்பு வாகன வசதி செய்து தரப்பட வேண்டும் என்பது அரசின் விதியாகும்.

பாதி வழியில் தவித்த தாய் – பச்சிளம் குழந்தை
இருப்பினும், மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சார்பில் உரிய வாகன வசதி செய்து தராமல் அந்தப் பெண்ணை அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. வனப்பகுதியான குல்லட்டி கிராமத்திற்குச் செல்ல மேலூர் பகுதியிலிருந்து பேருந்து மற்றும் பிற வாகன வசதிகள் இரவு நேரத்தில் இல்லாததால், அந்தப் பெண் தனது பச்சிளம் குழந்தையுடன் மேலூர் என்ற இடத்திலேயே நடு இரவில் குளிரிலும் இருளிலும் மேல் நடவடிக்கை தெரியாமல் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.
ஆட்சியரின் அதிரடி தலையீடு
பாதி வழியில் பழங்குடியினத் தாய் குழந்தையுடன் தவிக்கும் தகவல், சமூக ஆர்வலர்கள் மூலம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டது. தகவல் அறிந்த மறுநிமிடமே விரைந்து செயல்பட்ட மாவட்ட ஆட்சியர், உடனடியாக மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களைத் தொடர்பு கொண்டு, அந்தத் தாயையும் குழந்தையையும் பத்திரமாக மீட்பதற்கு அரசு ஆம்புலன்ஸ் வாகனத்தை அனுப்பி வைத்தார். ஆட்சியரின் உத்தரவின் பேரில் விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மூலம் தாயும் குழந்தையும் நள்ளிரவில் அவர்களது குல்லட்டி கிராமத்தில் பத்திரமாகச் கொண்டு போய் சேர்க்கப்பட்டனர்.
அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் இத்தகைய அலட்சியப்போக்கு குறித்து உரிய விசாரணை நடத்தி, தவறிழைத்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி பழங்குடியின மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
