மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழ் ஓதுவார்களுக்குச் சம உரிமை வழங்கி, கருவறையிலும் கோபுரக் கலசத்திலும் தமிழ் ஒலிக்கச் செய்ய வேண்டும் என்றும்; தவறினால் 17-ஆம் தேதி மதுரையில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என்றும் தெய்வத் தமிழ் பேரவை சார்பில் இயக்குநர் கௌதமன் கடுமையாக எச்சரித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இது குறித்து வெளியிட்ட காரசாரமான அறிக்கையின் விவரம் வருமாறு:

தமிழுக்கு 50 சதவீத உரிமை — நீதிமன்றத் தீர்ப்பு சுட்டிக்காட்டு
வரும் 17-ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடமுழுக்கு மற்றும் தீர்த்தவாரி விழா நடைபெறவுள்ளது. இதற்கான யாகசாலை பூஜைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. தமிழ்நாட்டில் எந்தக் கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றாலும், 50 சதவீத அளவிற்குத் தமிழ் ஓதுவார்கள் மற்றும் தமிழ் அர்ச்சகர்கள் மூலமாகத் தேவாரம், திருவாசகம், திருமந்திரம் போன்ற தெய்வீகத் தமிழ் பாடல்கள் ஓதப்பட வேண்டும் என்பது நீதித்துறை மற்றும் நீதிமன்றங்கள் வழங்கிய தெளிவான தீர்ப்பாகும். ஆனால், இந்த ஆட்சியில் தமிழ் ஓதுவார்களைப் புறக்கணிக்கும் நிலை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் அரசு மீது சரமாரி குற்றச்சாட்டு
இந்து சமய அறநிலையத்துறைக்கு ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த அமைச்சர் நியமிக்கப்பட்டு, “நாங்கள் சொல்வதுதான் சட்டம்” என்ற ஆணவத்துடன் தமிழ் ஓதுவார்களை யாகசாலையில் அனுமதிக்காமல், கோயிலுக்கு வெளியே ஓரமாக நிற்க வைக்கும் அவல நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் தற்போது லண்டனில் இருந்தாலும், இங்கு நடைபெறும் சட்டவிரோதப் புறக்கணிப்புகள் குறித்து உளவுத்துறை மூலமாக அவருக்குத் தகவல்கள் சென்று கொண்டுதான் இருக்கும். இன்றைக்குள்ளாகவே தமிழ் ஓதுவார்கள் யாகசாலையில் சமமாக அமர வைக்கப்பட வேண்டும். கருவறைக்குள்ளும், கோபுரக் கலசத்தின் மீதும் தமிழ் பாடல்கள் ஒலிப்பதை அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும்.
மரியாதையாகப் பதவியை விட்டு விலகுங்கள்
தமிழர்களால் கட்டப்பட்ட கோயிலில், தமிழ்ச் சங்கங்கள் நிறுவி தமிழை வளர்த்த மதுரை மண்ணில் தமிழுக்கு இடமில்லை என்றால், அதிகாரிகளாக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும் அல்லது ஆளுங்கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் மரியாதையாகத் தங்கள் பதவிகளை விட்டு வெளியேற வேண்டும். அறநிலையத்துறை என்ற ஒன்று தமிழர்களுக்கு எதிராகவும், ஓதுவார்களை வெளியிலும் தள்ளும் வகையில் செயல்படுமேயானால், அந்தத் துறையின் கதவுகளை இழுத்து மூடும் நிலை ஏற்படும்.
தஞ்சைப் பெரிய கோயில் கசப்பான அனுபவமும் எச்சரிக்கையும்
கடந்த காலத்தில் தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கின் போது, 216 அடி உயரக் கோபுரத்தில் ஏறுவதற்கு மருத்துவச் சான்றிதழைக் காரண காட்டி தமிழ் ஓதுவார்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுத் துரோகம் செய்யப்பட்டது. அதேபோல ஒரு துரோகம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எங்களுக்கு மாலை, மரியாதை, கௌரவம் எதுவும் தேவையில்லை. ஆனால் எங்கள் இனம், மொழி, கலாசாரம் மற்றும் கடவுளைத் தொட்டால் யாரையும் விட்டுவைக்க மாட்டோம்.
17-இல் மதுரை நோக்கிப் பயணம் — இறுதி எச்சரிக்கை
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது மதுரையில் மக்கள் எவ்வாறு திரண்டார்களோ, அதேபோல வரும் 17-ஆம் தேதி காலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அடிவாரத்தில் நாங்கள் அணிதிரள்வோம். கருவறையிலும் கோபுரக் கலசத்திலும் தமிழ் ஒலிக்கவில்லை என்றால், அதற்குக் காரணமான எவரையும் விட்டுவைக்க மாட்டோம்.
எனவே, முதலமைச்சர் விஜய்யும், அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷும் குடமுழுக்கில் பங்கேற்கும் ஓதுவார்கள் மற்றும் அர்ச்சகர்களின் அதிகாரப்பூர்வப் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும். குடமுழுக்கு நிகழ்வு முதன்மையாகத் தமிழில்தான் நடைபெற வேண்டும்; கும்ப நீரைத் தமிழ் ஓதுவார்களே ஊற்ற வேண்டும். எங்களது இந்த நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு உடனே செவிசாய்க்காவிட்டால், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போலத் தமிழர்களின் ஒட்டுமொத்தப் பலத்தையும் உறுதியையும் மதுரை மண்ணில் காட்டுவோம் என இயக்குநர் கௌதமன் தனது பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பரபரப்பு: அறநிலையத்துறை அலுவலகத்தில் ஓதுவார்கள் உள்ளிருப்புப் போராட்டம் — பின்னணி என்ன?
