இந்தியாவில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் விதிகளில் மத்திய வெளியுறவு அமைச்சகம் முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இதற்காக பாஸ்போர்ட் விதிகள், 1980-ல் திருத்தம் செய்யப்பட்டு, புதிய ‘பாஸ்போர்ட் (திருத்த) விதிகள், 2026’ அறிவிக்கப்பட்டுள்ளன.


புதிய விதியில் என்ன மாற்றம்?
புதிய விதிகளின்படி, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் 36 பக்க சாதாரண பாஸ்போர்ட்டின் செல்லுபடியாகும் காலம் 5 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், இந்த பாஸ்போர்ட் குழந்தை 18 வயதை அடையும் வரை மட்டுமே செல்லுபடியாகும். அதாவது, 5 ஆண்டுகள் அல்லது குழந்தை 18 வயதை அடையும் காலம் – இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை பாஸ்போர்ட் செல்லுபடியாகும்.
முந்தைய விதி என்ன?
முந்தைய விதிகளின்படி, 15 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு வழங்கப்பட்ட 36 பக்க சாதாரண பாஸ்போர்ட் 5 ஆண்டுகள் அல்லது குழந்தை 15 வயதை அடையும் வரை மட்டுமே செல்லுபடியாகும். இதில் எது முதலில் வந்ததோ அது பொருந்தும்.
தற்போது குழந்தையின் செல்லுபடியாகும் கால வரம்பு 15 வயதிலிருந்து 18 வயதாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் 15 வயதைக் கடந்த பிறகும் குறிப்பிட்ட காலத்திற்கு அந்த பாஸ்போர்ட்டை பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கிறது.
புதிய விதிகள் எப்போது முதல்?
பாஸ்போர்ட் விதிகளில் செய்யப்பட்ட இந்த புதிய மாற்றங்கள் செப்டம்பர் 15, 2026 முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் பாஸ்போர்ட் செல்லுபடியாகும் காலத்தை 18 வயது வரை நீட்டிக்கும் வகையில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றம், வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
