இயக்குநர் அட்லீ, ‘பத்தா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், பிறர் பேசுவதைப் பற்றி கவலைப்படாமல் தங்களது இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என இளம் தலைமுறையினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் மறைமுகமாக விமர்சிப்பதை தவிர்த்து, ஏதேனும் கூற வேண்டுமென்றால் நேரடியாக பேச வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


“ஊர் ஆயிரம் பேசும்!”
‘பத்தா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய அட்லீ, “ஊர் வாயை அடைக்க முடியாது. ஊர் ஆயிரம் பேசும். ஊர் பேசுவதை நம்பி நாம் வாழ்வது சரியல்ல” என்ற கருத்தை முன்வைத்தார்.
மேலும், யார் என்ன சொன்னாலும் அதைப் பற்றி கவலைப்படாமல், தங்களது இலக்கை நோக்கி தொடர்ந்து செல்ல வேண்டும் என்றும், பயணத்தில் சிறிய தடைகள் வருவது இயல்புதான் என்றும் அவர் கூறினார்.
சமூக வலைதளங்கள் குறித்து அட்லீ
சமூக வலைதளங்களில் ஒருவர் இன்னொருவரைப் பற்றி கூறுகிறார், இன்னொருவர் அவரைப் பற்றி கூறுகிறார் என்று மறைமுகமாக பேசுவதை தவிர்க்க வேண்டும் என அட்லீ தெரிவித்தார்.
ஏதேனும் ஒரு நபரிடம் கூற வேண்டிய விஷயம் இருந்தால், அதை நேரடியாகவே கூறிவிடலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“அடுத்த தலைமுறை அரசியலில் வலுவாக இருக்கும்”
அரசியல் குறித்தும் அட்லீ தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டார். அடுத்த தலைமுறையினர் அரசியலில் அதிகளவில் ஈடுபாடு காட்டுவார்கள் என்றும், இதற்கு விஜய் முக்கிய காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தான் அரசியல்வாதி இல்லை என்றும், அரசியல் பேசவில்லை என்றும் கூறிய அட்லீ, தற்போது இளம் வயதினரும் சட்டப்பேரவை நிகழ்வுகளை கவனிக்கும் சூழல் உருவாகியுள்ளதாக தெரிவித்தார். அரசியல் என்பது அனைவருக்கும் தொடர்புடையது என்றும், அதை எவ்வாறு அணுகுகிறோம் என்பது ஒவ்வொருவரின் சிந்தனையைப் பொறுத்தது என்றும் கூறினார்.
விஜய் சேதுபதி பேச்சு விவகாரத்தின் பின்னணி
சமீபத்தில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய சில கருத்துகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தின. அந்தக் கருத்துகள் முதல்வர் விஜயை மறைமுகமாக குறிப்பதாக சிலர் சமூக வலைதளங்களில் விளக்கங்களை முன்வைத்தனர். ஆனால் விஜய் சேதுபதி தனது பேச்சில் விஜயின் பெயரையோ, குறிப்பிட்ட அரசியல் சூழலையோ நேரடியாக குறிப்பிடவில்லை.
இந்தச் சூழலில் அட்லீயின் “யார் என்ன சொன்னாலும் கேட்காதீர்கள்” மற்றும் சமூக வலைதளங்களில் மறைமுகமாக பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற கருத்துகள் தற்போது கவனம் பெற்றுள்ளன. இருப்பினும், அட்லீ தனது பேச்சில் விஜய் சேதுபதியின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை.
‘பத்தா’ திரைப்படம்
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தை அட்லீ, பிரியா அட்லீ மற்றும் ஸ்டார் ஸ்டூடியோ 18 இணைந்து தயாரித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படம் அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
