சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில், முத்தமிழறிஞர் கலைஞரின் “இனமானம் காத்த ஏந்தல் தந்தை பெரியார்” என்னும் புத்தக அறிமுக விழா மற்றும் திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசுவின் 85ஆம் ஆண்டு பிறந்தநாள் மற்றும் பாராட்டு விழா எழுச்சியுடன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், திமுக மருத்துவ அணி மாநில செயலாளர் டாக்டர் எழிலன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்த விழாவில் திராவிடர் கழகம் சார்பாக, மூத்த ஆய்வாளர் க.திருநாவுக்கரசுக்கு ‘திராவிட வரலாறு பண்பாட்டு ஆய்வறிஞர் விருது’ வழங்கி கவுரவிக்கப்பட்டது. விழாவில் தலைவர்கள் ஆற்றிய உரைகளின் விரிவான தொகுப்பு இதோ:

அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ.-யால் இயக்கத்தை வீழ்த்த முடியாது: கி.வீரமணி ஆவேசம்!
விழாவில் நிறைவுரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், திராவிட இயக்கத்தின் வரலாற்றைக் கொச்சைப்படுத்த நினைப்பவர்களுக்குத் தகுந்த பதிலடி கொடுத்தார். அவர் பேசுகையில், “திராவிட இயக்கத்தின் வரலாற்றை மாற்றவும் கொச்சைப்படுத்தவும் சிலர் நினைக்கிறார்கள். ஆனால், என்னதான் செய்தாலும் தந்தை பெரியார் இன்றும் எதிரிகளை மிரட்டக்கூடிய ஒரு பேராற்றலாகவே உள்ளார். பெரியார் என்பது அனைத்துக் கருத்துகளையும் தாங்கிய ஒரு பேரங்காடி போன்றது. தற்போதெல்லாம் வரலாற்றை மாற்றிக் கூறுவதும், நடந்த நிகழ்வுகளை நடக்கவில்லை எனப் பொய் உரைப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இத்தகைய சூழலில் உண்மையான எழுத்தாளர்களும் ஆய்வாளர்களும் நமது சமூகத்திற்கு மிகவும் அவசியமானவர்கள்.”
மேலும் பேசிய அவர், “ஆயிரம் நெருக்கடி காலங்களைக் கடந்த இயக்கம் நமது திராவிட இயக்கம். இந்த இயக்கத்தை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை போன்ற மத்திய அமைப்புகளை ஏவி விடுகிறார்கள்; ஆனால், அவையெல்லாம் இந்த இயக்கத்திற்கு எதிராக ஒன்றுமே செய்ய முடியாது” என்று ஆவேசமாகக் குறிப்பிட்டார்.
ஏமாற்று வேலைகளும் கொள்கை முரண்பாடுகளும் டாக்டர் எழிலன் விமர்சனம் முன்னதாகப் பேசிய திமுக மருத்துவ அணி மாநில செயலாளர் டாக்டர் எழிலன், தற்கால அரசியல் சூழல் மற்றும் கொள்கை முரண்பாடுகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அவர் பேசுகையில், “நாத்திகராக இருப்பவர்கள் இக்கட்டான சூழலில் ஆத்திகராக மாறுகிறார்கள் என்கிற கேள்வி ஒருமுறை பெரியாரிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பெரியார், ‘அவர்கள் நாத்திகனைப் போல் நடித்து நாத்திகர்களை ஏமாற்றுவார்கள்; ஆத்திகனைப் போல் நடித்து ஆத்திகர்களை ஏமாற்றுவார்கள்’ என்றார். இவர்களின் கொள்கை என்பது நிலையானதல்ல, ஏமாற்று வேலை மட்டுமே இவர்களின் நிரந்தரக் கொள்கை” என்றார்.
மேலும், “தங்களின் கொள்கை வழிகாட்டியாகப் பெரியாரையும், அம்பேத்கரையும் மேடையில் முன்னிறுத்திவிட்டு, பின்வாசல் வழியே சடங்கு சம்பிரதாயங்களையும், ஜோசியர் சொல்படி வாஸ்து பார்த்து அறைகளை மாற்றியமைப்பதும் எந்த வகையிலும் நியாயமல்ல. ஆத்திகம், நாத்திகம் எல்லாவற்றையும் கடந்து மக்களை ஏமாற்றுவது மட்டுமே சிலரின் ஒற்றை நோக்கமாகும்” என்று கடுமையாகச் சாடினார்.
தற்கால இளைய சமுதாயம் குறித்துப் கவலை தெரிவித்த அவர், “இளைஞர்களின் சிந்திக்கும் திறனைக் குறைக்கும் வகையில் சமூக வலைதளங்களும், குறுகிய நேரத் தகவல்களும் (Reels/Shorts) சோம்பேறித்தனத்தை உருவாக்குகின்றன. நூல்களை வாசிக்கும் பழக்கம் குறைந்து வருவதை மனுதர்ம வாதிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்கள். சிந்திக்கும் திறனைத் தடுத்தால் மட்டுமே எந்தப் பொய்யையும் மக்களிடம் கொண்டு செல்ல முடியும் என்ற சதி இங்கு அரங்கேறி வருகிறது” என்றார்.
திராவிடத்தின் எல்லை எல்லை கடந்து செல்ல வேண்டும் – ஜெகத்ரட்சகன் பேச்சு
விழாவில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன், “தந்தை பெரியாரைப் போன்றதொரு தலைவரை உலக வரலாற்றிலேயே பார்க்க முடியாது. கோடிக்கணக்கான மக்களின் தேவைகளை மிகச் சிறிய மொழி எல்லைக்குள் நின்று சிந்திக்காமல், ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் பொதுவானதாகப் பேசினார். குலம், மொழி எல்லாவற்றையும் கடந்த திராவிட இயக்கத்தின் கொள்கைகள் தமிழ்நாட்டோடு நின்றுவிடாமல், இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று சேர வேண்டும்” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். பெரியார் திடலில் நடைபெற்ற இந்த எழுச்சிமிகு விழாவில் ஏராளமான கழகத் தொண்டர்களும், இலக்கிய ஆர்வலர்களும், மாணவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
