‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் 122-வது பிறந்தநாளையொட்டி, அவரை நினைவுகூர்ந்து முதல்-அமைச்சர் விஜய் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். தமிழுக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும், இதழியல் துறைக்கும் சி.பா.ஆதித்தனார் ஆற்றிய பணிகளை அவர் குறிப்பிட்டுள்ளார்.


சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள்
சி.பா.ஆதித்தனாரின் 122-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள ஆதித்தனார் சாலையில் அமைந்துள்ள அவரது முழு உருவச் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
‘தினத்தந்தி’ குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மற்றும் ‘தினத்தந்தி’ குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழுக்கும் இதழியல் துறைக்கும் ஆற்றிய பணி
முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ் இதழியலின் முன்னோடிகளில் ஒருவராகவும், ‘தினத்தந்தி’ நாளிதழின் நிறுவனராகவும், முன்னாள் சட்டமன்றப் பேரவைத் தலைவராகவும் சி.பா.ஆதித்தனார் விளங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
எளிய மற்றும் உயிரோட்டமான தமிழ்நடையை இதழியல் துறையில் அறிமுகப்படுத்தியதுடன், தமிழ்நாட்டின் கடைக்கோடி மக்களும் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கியதில் அவர் முக்கிய பங்காற்றியதாகவும் விஜய் தெரிவித்துள்ளார்.
“புகழ் என்றும் நிலைத்திருக்கும்”
அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் சி.பா.ஆதித்தனார் முன்னோடியாகத் திகழ்ந்ததாக முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழ்மொழி மற்றும் தமிழினத்தின் முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்த சி.பா.ஆதித்தனாரின் புகழ் நம் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும் என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
