தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்ந்த வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மோசடி செய்ததாக தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் டி.சி. இளங்கோவன் உள்ளிட்ட பல பள்ளிகளின் நிர்வாகிகள் புகார் அளித்திருந்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB), அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துகுமார், சுரேஷ், ராஜா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு தொடர்பாக, அன்பில் மகேஷின் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் உட்பட 9 இடங்களில் சோதனை நடத்திய போலீசார், அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்த போது, அன்பில் மகேஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், இந்த வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதால், இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி, அரசகுமார் என்பவர் தனியாக அலுவலகம் அமைத்து பணம் வசூலித்துள்ளார். துறைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் தான். விசாரணை நடந்து வருகிறது எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, கைது செய்யக் கூடாது என உத்தரவு பிறப்பித்தால், வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவில் எப்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பும் எனத் தெரிவித்த நீதிபதி, இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்க முடியாது; வேண்டுமானால் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் எனக் கூறி, அன்பில் மகேஷ் மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தார்.
ஜெம் வீரமணி வழக்கு: சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்து துணை ஆணையர் கீதாஞ்சலி விலகுவதாக தகவல்!
