ஓசூரில் வீட்டில் தீய சக்திகள் இருப்பதாகவும், பரிகார பூஜை செய்தால் ரூ.100 கோடி வருமானம் கிடைக்கும் என்றும் கூறி, எலுமிச்சம்பழ வியாபாரியின் குடும்பத்தினரை ஏமாற்றி ரூ.12 லட்சம் ரொக்கம் மற்றும் 28 பவுன் தங்க நகைகளை மோசடி செய்த 21 வயது வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காதல் நாடகமாடி குடும்பத்தினருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, பரிகார பூஜை என்ற பெயரில் பல மாதங்களாக இந்த மோசடியில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெண் குரலில் பேசி காதல் நாடகம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காளேகுண்டா பகுதியைச் சேர்ந்தவர் அருள் (55). எலுமிச்சம்பழ வியாபாரியான இவருக்கு மனைவி, மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
கடந்த மே மாதம் அருளின் மகன் குபேந்திரன் (24) செல்போனுக்கு பெண் குரலில் அழைப்பு ஒன்று வந்துள்ளது. மறுமுனையில் பேசிய நபர், தனது பெயர் பிரியா என்றும், குபேந்திரனைக் காதலிப்பதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பிய குபேந்திரன், தொடர்ந்து அந்த நபரிடம் பேசி வந்துள்ளார்.
இதற்கிடையே, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிவசாரதி என்ற வாலிபர் அருளின் வீட்டிற்குச் சென்று, தான் பிரியாவின் சகோதரர் என அறிமுகப்படுத்திக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனை நம்பிய அருளின் குடும்பத்தினர், சிவசாரதியுடன் நெருக்கமாகப் பழகத் தொடங்கினர்.
வீட்டில் தீய சக்தி இருப்பதாகக் கூறி பரிகார பூஜை
குடும்பத்தினருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட சிவசாரதி, திடீரென அருளின் வீட்டில் தீய சக்திகள் இருப்பதாகவும், அவற்றை அகற்றுவதற்குப் பரிகார பூஜை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும், இந்தப் பூஜையைச் செய்தால் குடும்பத்தினருக்கு மிகப்பெரிய செல்வம் கிடைப்பதுடன், ரூ.100 கோடி வரை வருமானம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தைகளைக் கூறியதாகத் தெரிகிறது.
அவரது பேச்சை நம்பிய அருளின் குடும்பத்தினர், பரிகார பூஜை நடத்த ஒப்புக்கொண்டுள்ளனர். இதையடுத்து, வீட்டைச் சுற்றிக் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்திய சிவசாரதி, பூஜை நிறைவடையும் வரை யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும், உறவினர்கள் யாரும் வீட்டிற்கு வரக்கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளார். தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் முதல் வீட்டில் பரிகார பூஜை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
ரூ.12 லட்சம் ரொக்கம், 28 பவுன் நகைகள் மோசடி
பல மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்ற பரிகார பூஜை சுமார் 10 நாட்களுக்கு முன்பு நிறைவடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் பூஜைச் செலவுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி, அருளிடமிருந்து ரூ.12 லட்சம் ரொக்கப் பணத்தை சிவசாரதி பெற்றுள்ளார். மேலும், குடும்பத்தினர் அணிந்திருந்த 28 பவுன் தங்க நகைகளையும் அடகு வைக்கச் செய்ததாகத் தெரிகிறது.
நகைகளை அடகு வைத்துப் பெற்ற பணத்தைக் கொண்டு, அருளின் வீட்டில் பீரோ, கட்டில், சோபா செட், குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கிப் போட்டதாகவும், குடும்பத்தினருடன் ஆடம்பரமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. பரிகார பூஜை முடிந்த பிறகு பணத்தையும் நகைகளையும் திருப்பிக் கொடுப்பார் எனக் குடும்பத்தினர் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், பூஜை முடிந்த பின்னரும் பணத்தையும் நகைகளையும் திருப்பிக் கொடுக்காமல் சிவசாரதி திடீரென தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் விசாரித்தபோது, பிரியா என்ற பெயரில் பெண் குரலில் குபேந்திரனிடம் பேசியதும் சிவசாரதிதான் என்பதும், காதல் நாடகமாடி குடும்பத்தினரின் நம்பிக்கையைப் பெற்று மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை
இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அருள், ஓசூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த சிவசாரதியைத் தேடி வந்தனர். இந்நிலையில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 21 வயதுடைய சிவசாரதியை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அருளின் குடும்பத்தினரிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, பரிகார பூஜை நடத்துவதாகக் கூறி பணம் மற்றும் தங்க நகைகளைப் பெற்ற மோசடியில் அவர் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீசார் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
காதல் நாடகம், பரிகார பூஜை, ரூ.100 கோடி வருமானம் என்ற ஆசை வார்த்தைகள் எனப் பல்வேறு வழிகளில் குடும்பத்தினரின் நம்பிக்கையைப் பெற்று நடைபெற்ற இந்த மோசடி சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரியாணி கடை கேஷியரை கத்தியால் சரமாரியாகத் தாக்கி பணம் கொள்ளை!
