Homeசெய்திகள்தமிழ்நாடுவெற்றிப் பயண திட்டத்தால் நிதி நெருக்கடியில் போக்குவரத்துக் கழகம்! ஊழியர் முன்னேற்ற சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்!

வெற்றிப் பயண திட்டத்தால் நிதி நெருக்கடியில் போக்குவரத்துக் கழகம்! ஊழியர் முன்னேற்ற சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்!

-

- Advertisement -

மகளிருக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டமான ‘வெற்றிப் பயணம்’ காரணமாக மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், இதனால் தொழிலாளர்களின் சம்பளம், ஓய்வூதியப் பணப்பலன்கள் மற்றும் பேருந்து பராமரிப்புப் பணிகளில் சிக்கல் உருவாகியுள்ளதாகவும் ஊழியர் முன்னேற்றச் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

we-r-hiring

வருவாய் வீழ்ச்சியும் டீசல் செலவு நெருக்கடியும்

சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகர் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில், மாநகர் போக்குவரத்துக் கழக ஊழியர் முன்னேற்ற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தொ.மு.ச. தலைவர் கி. நடராசன், ஏற்கனவே ‘விடியல் பயணம்’ திட்டத்தின் கீழ் மொத்தப் பேருந்துகளில் 45 முதல் 50 சதவீதம் வரை இலவசப் பயணத்திற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்ததாகக் குறிப்பிட்டார்.

தற்போது மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் இயங்கும் 3,233 பேருந்துகளும் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இதனால் தினசரி வருவாய் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், நாளொன்றுக்கு டீசல் செலவிற்காக மட்டும் ரூ.1 கோடியே 90 லட்சம் தேவைப்படும் நிலையில், அதனை ஈடுகட்ட போதிய நிதி இல்லாமல் போக்குவரத்துக் கழகம் சிரமத்தைச் சந்தித்து வருவதாகவும் கூறினார்.

தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள்

நிதிப் பற்றாக்குறையால் பேருந்து பராமரிப்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஓய்வுபெற்று ஏழு மாதங்கள் ஆகியும் சில தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்கள் நிலுவையில் இருப்பதாகவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தினசரி வசூல் படியான ரூ.50 முதல் ரூ.60 வரையிலான தொகை, தற்போது ரூ.18 முதல் ரூ.20 வரை குறைந்துள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

ஊழியர் சங்கத்தின் முக்கியக் கோரிக்கைகள்

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள், தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

  • மின்சாரப் பேருந்துகள்: ஒப்பந்த அடிப்படையிலும் தனியார்மயமாக்கல் மூலமும் மின்சாரப் பேருந்துகளை இயக்கும் திட்டத்தைக் கைவிட்டு, அரசுப் போக்குவரத்துக் கழகங்களே நேரடியாக இயக்க வேண்டும்.
  • பழைய ஓய்வூதியத் திட்டம்: 2003 ஏப்ரல் 1-க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
  • போனஸ் மற்றும் ஊக்கத்தொகை: தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் மற்றும் 10 சதவீத ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
  • படிகள் உயர்வு: வெற்றிப் பயணப் பேருந்துகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் தினப்படி மற்றும் வசூல் படியை உயர்த்த வேண்டும்.
  • நிலுவைப் பணப்பலன்கள்: ஓய்வுபெற்ற மற்றும் இயற்கை எய்திய தொழிலாளர்களின் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.
  • பராமரிப்பு மற்றும் நிதி ஒதுக்கீடு: டீசல் செலவுகளை ஈடுகட்டவும், பேருந்துகளின் பராமரிப்பை மேம்படுத்தவும் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்நிலையில், போக்குவரத்துக் கழகத்தின் நிதி நெருக்கடிக்குத் தீர்வு காணவும், தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழியர் முன்னேற்றச் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர் போக்குவரத்துக் கழக ஊழியர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் சரவணகுமார், தலைவர் மோகன்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விலைவாசி உயர்வை விமர்சித்த பேராசிரியர் கலையரசன் கைது? தவெக அரசுக்கு கடும் கண்டனம்!

MUST READ