புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே தாழனூர் கிராமத்தில் கூலித் தொழிலாளி ஒருவரின் வீட்டிற்கு ரூ.27,858 மின் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மின் கட்டணத்தைச் செலுத்தாததால் மின்வாரிய ஊழியர்கள் வீட்டின் மின் இணைப்பைத் துண்டித்ததாகவும், இதனால் அந்தக் குடும்பத்தினர் கடந்த ஒரு வாரமாக மின்சாரம் இன்றி தவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.


குடும்பத்தின் மின்சாரப் பயன்பாடு
ஆவுடையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட தாழனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோகன். தையல் தொழிலாளியான இவர் திருப்பூர் பகுதியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பசுமதி என்ற மனைவியும், ராகுல் (16), ராகவி (14) என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
அசோகன் வீட்டில் ஒரு மின்விசிறி, மின்விளக்கு மற்றும் தொலைக்காட்சிப் பெட்டி மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது. குறைந்த அளவிலான மின்சாரத்தைப் பயன்படுத்தி வந்ததால், அரசின் 100 யூனிட் இலவச மின்சாரமே தங்களுக்குப் போதுமானதாக இருந்ததாகவும், இதுவரை மின் கட்டணம் செலுத்தியதில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ரூ.27,858 மின் கட்டணம் விதிக்கப்பட்டதாகப் புகார்
கடந்த மே மாதம் ரூ.510 மின் கட்டணம் செலுத்துமாறு குறுஞ்செய்தி வந்ததாகவும், அதன்படி அந்தத் தொகையை அசோகன் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு மின் கணக்கீடு செய்ய வந்த ஊழியர்கள், குறைந்த யூனிட்டுகளே பயன்படுத்தப்பட்டுள்ளதால் அந்த மாதம் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்று தெரிவித்ததாகக் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
இந்நிலையில், இரண்டு மாதங்களுக்குப் பிறகு ரூ.27,858 மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தங்களது வீட்டில் குறைந்த அளவிலான மின்சாதனங்கள் மட்டுமே உள்ள நிலையில், இவ்வளவு பெரிய தொகை மின் கட்டணமாக வந்திருப்பது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னறிவிப்பின்றி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு
மின் கட்டணம் தொடர்பாக உரிய விளக்கம் கிடைக்காத நிலையில், கடந்த வாரம் மின்வாரிய அதிகாரிகள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வீட்டின் மின் இணைப்பைத் துண்டித்துச் சென்றதாக அசோகன் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக வீட்டில் மின்சாரம் இல்லாததால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வீட்டைச் சுற்றி பூச்சிகள் மற்றும் பாம்புகள் வருவதாகவும் கூறி குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனப் புகார்
இந்தப் பிரச்சினை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மின்சாரத் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு மின் கட்டணப் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண்பதுடன், தங்களது வீட்டிற்கு மீண்டும் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போதைய தவெக ஆட்சியில், இலவச மின்சாரத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்த கூலித் தொழிலாளி ஒருவரின் வீட்டிற்கு ரூ.27,858 மின் கட்டணம் வந்துள்ளதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது. எனினும், இந்தக் கட்டண உயர்வுக்கான காரணம் என்ன என்பது குறித்து மின்வாரியத்தின் விளக்கம் வெளியாகவில்லை.
