ஆந்திராவைச் சேர்ந்த 45, 60 வயது பெண்களிடம் போலீசார் விசாரணை – சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மருத்துவம் படிக்காமல் கருக்கலைப்பு செய்வதற்காக வந்ததாகக் கூறப்படும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை கிராமிய போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊர் ஊராகச் சென்று கருக்கலைப்பு செய்வதாகப் புகார்!
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சந்தபேட்டை பகுதியைச் சேர்ந்த கீதா (45), இந்திராணி (60) ஆகிய இருவரும் முறையான மருத்துவக் கல்வி பயிலாமல், பல்வேறு பகுதிகளுக்குச் சென்று கருக்கலைப்பு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம், புதூர் பகுதிக்கு கருக்கலைப்பு செய்வதற்காக இருவரும் ஆட்டோவில் சென்று கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
ரகசிய தகவலால் விரைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள்!
இதுகுறித்த ரகசியத் தகவல் மாவட்ட சுகாதார இணை இயக்குநர் குழு சிவலிங்கத்திற்குக் கிடைத்துள்ளது.
இதையடுத்து மாவட்ட சுகாதார இணை இயக்குநர் குழு சிவலிங்கம் மற்றும் மருத்துவர் அரவிந்தன் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
அங்கு ஆட்டோவில் வந்திறங்கிய கீதா மற்றும் இந்திராணி ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இரண்டு பெண்கள் கைது – போலீசார் விசாரணை!
இதனைத் தொடர்ந்து இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
இதையடுத்து கிராமிய போலீசார் கீதா மற்றும் இந்திராணி ஆகிய இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவம் படிக்காமல் கருக்கலைப்பு செய்ய வந்ததாகக் கூறப்படும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
