Homeசெய்திகள்சென்னைசென்னையில் குரூப் 2ஏ தேர்வு எழுதிய 400 பேரின் விடைத்தாள்கள் செல்லுமா? கைரேகைக்கு மேல் கையெழுத்திடச்...

சென்னையில் குரூப் 2ஏ தேர்வு எழுதிய 400 பேரின் விடைத்தாள்கள் செல்லுமா? கைரேகைக்கு மேல் கையெழுத்திடச் சொன்னதால் சர்ச்சை!

-

- Advertisement -

சென்னையில் குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வு எழுதிய சுமார் 400 தேர்வர்களின் விடைத்தாள்கள் செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. விடைத்தாளில் கைரேகை வைக்க வேண்டிய இடத்திலேயே கையெழுத்திடுமாறு தேர்வு அறைக் கண்காணிப்பாளர்கள் அறிவுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

we-r-hiring

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடத்தப்படும் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ முதல்நிலைத் தேர்வு இன்று (நவம்பர் 1) திட்டமிட்டபடி நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 89 ஆயிரத்து 885 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ பிரிவுகளைச் சேர்ந்த 846 பணியிடங்களை நிரப்புவதற்காக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. இதன்படி, ஒரு காலிப்பணியிடத்திற்கு சராசரியாக 579 பேர் போட்டியிடுகின்றனர்.

சென்னை தேர்வு மையத்தில் நடந்தது என்ன?

சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள எல்.எம். தாதா பள்ளியில் நடைபெற்ற குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வில் சுமார் 400 பேர் பங்கேற்றனர்.

அங்கு பணியில் இருந்த தேர்வு அறைக் கண்காணிப்பாளர்கள், தேர்வர்களின் விடைத்தாள்களில் கைரேகை வைக்க வேண்டிய இடத்தில் கைரேகையுடன் கையொப்பமும் இட வேண்டும் என்று அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் அனைவரும் கைரேகைக்கு மேல் கையொப்பமும் இட்டுள்ளனர்.

ஆனால், விடைத்தாளில் கைரேகை வைப்பதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் கைரேகையை மட்டுமே வைக்க வேண்டும் என்றும், கையொப்பமிடுவதற்காகத் தனியாக ஒதுக்கப்பட்ட பெட்டியில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

இதனால், கண்காணிப்பாளர்களின் அறிவுறுத்தலின்படி செயல்பட்ட சுமார் 400 தேர்வர்களின் விடைத்தாள்கள் செல்லாததாக அறிவிக்கப்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

விளக்கம் அளிக்காமல் சென்ற அதிகாரிகள்?

இந்தச் சம்பவம் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அலுவலகத்திலிருந்து அந்தத் தேர்வு மையத்திற்கு ஒதுக்கப்பட்ட அதிகாரிகளிடம் தேர்வர்கள் விளக்கம் கேட்டுள்ளனர். ஆனால், அவர்கள் உரிய பதில் அளிக்காமல் வேனில் ஏறிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் தேர்வு எழுதிய 400 பேரின் எதிர்காலம் குறித்த கேள்வி எழுந்துள்ளது. கண்காணிப்பாளர்களின் அறிவுறுத்தலின்படி தேர்வர்கள் செயல்பட்ட நிலையில், அவர்களுடைய விடைத்தாள்களின் நிலை குறித்து டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

92 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை!

இந்தத் தேர்வுக்கு சுமார் 92 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தும் தேர்வு எழுத வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தகவல்களை நடராஜ் ஐஏஎஸ் அகாடமியின் நிர்வாக இயக்குநர் நடராஜ் தெரிவித்துள்ளார். தேர்வர்களின் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் விரைவில் விளக்கம் அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘சார்ஜ்பீ சென்னை ரன்ஸ் 2026’: 14,000 பேர் பங்கேற்பு; மேடையில் பாடி அசத்திய அனிருத்!

MUST READ