
பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மை மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்ந்த தமிழ்நாடு, தற்போதைய தவெக ஆட்சியில் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவது பெரும் கவலையளிப்பதாக திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அண்டை மாநிலங்களை விடக் குறைந்த ஜிஎஸ்டி வளர்ச்சி: “கடந்த அக்டோபர் மாதத்திற்கான ஜிஎஸ்டி (GST) வரி வருவாய் வளர்ச்சியில் தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளது. நமது அண்டை மாநிலங்களான கேரளா 23%, ஆந்திரப் பிரதேசம் 24%, கர்நாடகா 18% மற்றும் தெலுங்கானா 14% என இரட்டை இலக்க (Double Digit) சதவீதத்தில் அபார வளர்ச்சி அடைந்துள்ளன. ஆனால், தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.
மாநிலத்தில் நிலவும் பொருளாதாரத் தேக்கம்: தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் சில முக்கியப் பொருட்களில் இருந்து பெறப்படும் வரியின் காரணத்தால், மாநிலத்தின் மொத்த வரி வருவாயில் ஓரளவு உயர்வு காணப்படுகிறது. இருப்பினும், நமது சொந்த உற்பத்தியின் (Local Production) மூலம் ஈட்டப்படும் வரி வருவாய் தொடர்ந்து குறைந்தே வருகிறது.
இது மாநிலத்தில் நிலவும் ஒட்டுமொத்த பொருளாதாரத் தேக்க நிலையின் தெளிவான அளவீடு என்பதை தவெக அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.
உற்பத்தியைப் பெருக்க உடனடி நடவடிக்கை தேவை: எனவே, பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களின் மீதான வருவாயை மட்டுமே நம்பியிருக்காமல், தமிழகத்தின் சொந்த உற்பத்தியைப் பெருக்க வேண்டும். உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் அதிகளவில் விற்பனை (ஏற்றுமதி) செய்வதற்கான வழிவகைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
தன் மூலம் தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை உயர்த்தவும், நமது இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தவெக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
