இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி மூலம் ரூ.5 கோடி பேரம் பேசப்பட்டதாகப் பள்ளிக்கல்வி மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ் மோகன் நேரடி வாக்குமூலம் கொடுத்திருப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.


உண்மையைப் பேசுவதில் அரிச்சந்திரனுக்கே சவால் விடுக்கும் அதிசயங்களும் ஆச்சரியங்களும் கலந்த தவெக ஆட்சியில், அரசுப் பதவிக்கு ரூ.5 கோடி வரை பேரம் பேசுவதற்கும், இடைத்தரகர் வேலை பார்ப்பதற்கும்தான் லயோலா மணிக்கு தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் பதவி வழங்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ரூ.5 கோடி பேரம் குறித்து நடவடிக்கை எடுக்காதது ஏன்?
இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு ரூ.5 கோடி வரை பேசப்பட்ட பேரம் குறித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததன் பின்னணி என்ன எனப் பொதுமக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்து வருவதாக டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
ஊழலை ஒழிக்க வந்ததாகக் கூறும் ஆட்சியாளர்கள், இதற்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை கொண்டவர்கள் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
லஞ்சம் கொடுத்தவருக்கும் வாங்கியவருக்கும் ஒரே சட்டம் இல்லையா?
ஒரு கோப்பைத் திறந்ததற்கே திமுக முன்னாள் அமைச்சர் சிறையில் இருப்பதாகவும், அடுத்தடுத்த கோப்புகளைத் திறந்தால் என்னவெல்லாம் ஆகுமோ என்ற பில்டப்பிலேயே தவெக அரசு ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பதாகவும் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என்ற அடிப்படை அறிவுகூட அரசுக்கு இல்லையா எனக் கேள்வி எழுப்பிய அவர், லஞ்சம் வாங்கியதாகச் சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சருடன், லஞ்சம் கொடுத்ததாகச் சட்டமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்த இந்நாள் நிதியமைச்சரும் சிறையில் இருந்திருக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சியினருக்கு கைது; சொந்தக் கட்சியினருக்கு சலுகையா?
ஊழல் மற்றும் லஞ்சப் புகார்களில் எதிர்க்கட்சியினர் என்றால் கைது நடவடிக்கை, இடைத்தரகர் வேலை பார்த்தாலும் சொந்தக் கட்சியினர் என்றால் சலுகை என்ற தவெக அரசின் இரட்டை வேடத்தைப் பார்க்கும்போது, “உனக்கு வந்தால் ரத்தம்; எனக்கு வந்தால் தக்காளிச் சட்னியா?” என்ற நகைச்சுவைக் காட்சிகள்தான் நினைவுக்கு வருவதாக டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
முதல்வர் விஜய்க்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு ரூ.5 கோடி பேரம் பேசியது யார் என்ற விவரத்தை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்றும், இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இடைத்தரகர் வேலை பார்த்ததாகக் குற்றம்சாட்டப்படும் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி மற்றும் பேர விவரத்தை இதுநாள் வரை மறைத்ததாகக் குற்றம்சாட்டப்படும் பள்ளிக்கல்வி மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ் மோகன் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்தியுள்ளார்.
அதிமுகவுக்கு நெருக்கடிக்கு மேல் நெருக்கடி – இடைத்தேர்தலை எப்படி எதிர்கொள்ள போகிறார் எடப்பாடி?
