சென்னை புழல் அருகே 8 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்த நிலையில், பொதுமக்களால் தாக்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர், மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரைத் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், கொளத்தூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பதுங்கியிருந்தபோது கைது செய்தனர்.


சென்னை புழல் அருகே வசித்து வரும் 60 வயதான டேவிட்சன், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களைத் தனது ஆட்டோவில் அழைத்துச் சென்று காலையில் பள்ளியில் விடுவதும், மாலையில் மீண்டும் வீடுகளுக்கு அழைத்துச் செல்வதும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், வழக்கம்போல் பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் சென்றபோது, 8 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கடந்த அக்டோபர் 30ஆம் தேதி டேவிட்சனைத் தாக்கி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே, சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் புழல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணையைத் தொடங்கினர். தாக்குதலில் காயமடைந்திருந்த டேவிட்சனை போலீசார் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்
அங்கு சிகிச்சை பெற்று வந்த டேவிட்சன், அக்டோபர் 31ஆம் தேதி அதிகாலை காவல்துறையினரின் கண்காணிப்பில் இருந்தபோது தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, புழல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
பொதுமக்களால் பிடித்துக் கொடுக்கப்பட்ட நபர், காவல்துறை பாதுகாப்பில் இருந்தபோதே மருத்துவமனையில் இருந்து தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
தனிப்படை போலீசார் கைது
இந்த நிலையில், கொளத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட காவல் எல்லைப் பகுதியில் பதுங்கியிருந்த டேவிட்சனைத் தனிப்படை போலீசார் கைது செய்தனர். போக்சோ புகாரில் குற்றஞ்சாட்டப்பட்டு தற்போது கைது செய்யப்பட்டுள்ள அவரிடம், புழல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
