Homeசெய்திகள்இந்தியா8 மணி நேரம் விமானம் ஓட்டி வானில் GTA 6 ஓவியம்! அமெரிக்க விமானியின் வித்தியாசமான...

8 மணி நேரம் விமானம் ஓட்டி வானில் GTA 6 ஓவியம்! அமெரிக்க விமானியின் வித்தியாசமான சாதனை இணையத்தில் வைரல்!

-

- Advertisement -

உலகம் முழுவதும் வீடியோ கேம் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 6’ (GTA 6) விளையாட்டை வரவேற்கும் வகையில், அமெரிக்க விமானி ஒருவர் தனது விமானப் பயணப் பாதையைக் கொண்டு பிரமாண்டமான ஓவியத்தை உருவாக்கியுள்ளார். சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக விமானத்தை இயக்கி அவர் உருவாக்கிய இந்த வித்தியாசமான ஓவியம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

we-r-hiring

‘தி பைலட் பிக்காசோ’ என்ற விமானி

அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த பெஞ்சமின் மெக்டேனியல் (Benjamin McDaniel) என்பவர்தான் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார். சமூக வலைதளங்களில் ‘தி பைலட் பிக்காசோ’ (The Pilot Picasso) என்ற பெயரில் அறியப்படும் இவர், விமானத்தைப் பயன்படுத்தி வான்வழிப் பாதைகளில் பல்வேறு உருவங்களை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டவர்.

கடந்த நவம்பர் 5ஆம் தேதி, பென்டன்வில்லி விமான நிலையத்திலிருந்து 1978ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட செஸ்னா 182 ஸ்கைலேன் RG ரக விமானத்தில் அவர் புறப்பட்டார். தொடர்ந்து 8 மணி நேரம் 8 நிமிடங்கள் விமானத்தை இயக்கி, திட்டமிட்ட பாதையில் பறந்து GTA 6 விளையாட்டின் உருவத்தை உருவாக்கினார்.

956 மைல் பயணத்தில் உருவான GTA 6 ஓவியம்

சுமார் 956 மைல்கள் தூரம் கொண்ட இந்தப் பயணத்தில், விமானத்தின் பாதையைத் துல்லியமாகத் திட்டமிட்டு இயக்கியுள்ளார். விமானம் சென்ற பாதை Flightradar24 போன்ற விமானக் கண்காணிப்பு இணையதளங்களின் டிஜிட்டல் வரைபடத்தில் ஓவியமாகத் தெரியும் வகையில் அமைக்கப்பட்டது.

இந்த ஓவியத்தில் GTA 6 விளையாட்டின் லோகோ, ஹெலிகாப்டர், முதலை, பனை மரங்கள், ஸ்போர்ட்ஸ் கார் மற்றும் துப்பாக்கி ஏந்திய பெண் கதாபாத்திரம் உள்ளிட்ட உருவங்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக, வானில் புகை அல்லது வண்ணங்களைப் பயன்படுத்தி இந்த ஓவியம் உருவாக்கப்படவில்லை. விமானத்தின் பயணப் பாதையை டிஜிட்டல் வரைபடத்தில் இணைத்துப் பார்க்கும்போது மட்டுமே இந்தப் பிரமாண்ட ஓவியம் தென்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

11 ஆண்டுகளாகக் காத்திருந்தேன் – விமானி நெகிழ்ச்சி

தனது இந்த முயற்சி குறித்து பெஞ்சமின் மெக்டேனியல் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “GTA 6 விளையாட்டை வானில் வரைய எனக்கு 8 மணி நேரம் ஆனது. ஆனால், உண்மையில் இந்தத் தருணத்திற்காக 11 ஆண்டுகளாகக் காத்திருந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த முயற்சி எந்தவொரு விளம்பர நோக்கத்திற்காகவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், தீவிரமான GTA ரசிகர் என்ற முறையில் விளையாட்டின் மீதான தனது ஆர்வத்தை வெளிப்படுத்தவே இதைச் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மோனாலிசா, ஸ்பைடர் மேன் ஓவியங்களையும் உருவாக்கியவர்

பெஞ்சமின் மெக்டேனியல் இதற்கு முன்பும் விமானப் பயணப் பாதையைப் பயன்படுத்தி பல்வேறு ஓவியங்களை உருவாக்கியுள்ளார். உலகப் புகழ்பெற்ற மோனாலிசா ஓவியம், ஸ்பைடர் மேன் உருவம் உள்ளிட்டவற்றை இதே முறையில் உருவாக்கி கவனம் ஈர்த்துள்ளார்.

தற்போது GTA 6 விளையாட்டுக்காக அவர் உருவாக்கியுள்ள இந்த வான்வழி ஓவியத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. விளையாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி விமானப் பயண ஆர்வலர்களும் அவரது முயற்சியைப் பாராட்டி வருகின்றனர்.

GTA 6 விளையாட்டு நவம்பர் 19ஆம் தேதி பிளேஸ்டேஷன் 5 மற்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் X|S தளங்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் வெளியீட்டுக்கு முன்பே ரசிகர் ஒருவர் மேற்கொண்ட இந்த வித்தியாசமான முயற்சி இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

ஒவ்வொரு வீட்டிற்கும் மகிழ்ச்சி, செழிப்பை தீபாவளி கொண்டுவரட்டும்! நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

MUST READ