முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி திருவிழா நாளை (நவம்பர் 10) தொடங்குகிறது.
இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

நாளை அதிகாலை யாகசாலை பூஜையுடன் தொடக்கம்
சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்த தலமாக திருச்செந்தூர் போற்றப்படுவதால், இங்கு நடைபெறும் கந்த சஷ்டி திருவிழா பக்தர்களிடையே தனிச்சிறப்பு பெற்றதாக விளங்குகிறது.
இந்த விழாவின்போது ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்கியிருந்து ஆறு நாட்கள் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி திருவிழா நாளை காலை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. இதற்காக அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
தொடர்ந்து காலை 5 மணி முதல் 6 மணிக்குள் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலை மண்டபத்தில் எழுந்தருளுகிறார். இதையடுத்து காலை 7 மணியளவில் யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி திருவிழா முறைப்படி தொடங்க உள்ளது.
விரதம் இருக்க பக்தர்கள் வருகை
தீபாவளி பண்டிகையைக் கொண்டாடிய பக்தர்கள், அடுத்ததாக கந்த சஷ்டி திருவிழாவில் பங்கேற்று விரதம் இருப்பதற்காக திருச்செந்தூருக்கு வருகை தந்து வருகின்றனர். நேற்று முதலே பக்தர்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில், இன்று அதிகாலையிலும் ஏராளமானோர் கோவிலில் குவிந்தனர்.
சிதம்பரம், திருச்சி, மதுரை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்துள்ளனர். குறிப்பாக பெண்களும் அதிகளவில் விரதம் இருப்பதற்காக வருகை தந்துள்ளனர். பலர் பச்சை வேட்டி அணிந்து, துளசி மாலை அணிந்து முருகப்பெருமானை வழிபட்டு தங்களது விரதத்தைத் தொடங்கத் தயாராகி வருகின்றனர்.
விரதம் இருக்கும் பக்தர்கள் அமர்ந்து வழிபடுவதற்காகக் கோவில் வளாகத்தில் கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பக்தர்கள் தங்கி முருகப்பெருமானை வழிபட்டு விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
1.60 லட்சம் சதுர அடியில் தங்குமிட வசதிகள்
கந்த சஷ்டி விழாவையொட்டி, பக்தர்களின் தங்குமிடத் தேவையைக் கருத்தில் கொண்டு கோவில் நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விரதம் இருக்கும் பக்தர்கள் தங்குவதற்காக 5 நிரந்தரத் தங்குமிடங்கள் மற்றும் 11 தற்காலிகத் தங்குமிடங்கள் என மொத்தம் 16 இடங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இவை மொத்தம் 1 லட்சத்து 60 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நவம்பர் 15-ஆம் தேதி சூரசம்ஹாரம்
கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் நவம்பர் 15ஆம் தேதி மாலை 4 மணியளவில் கோவிலுக்கு முன்புள்ள கடற்கரையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியைக் காண 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி, பக்தர்களின் பாதுகாப்புக்காக 5 காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் மொத்தம் 4,300 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 493 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, 26 இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைத்து கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மருத்துவம், கழிப்பறை மற்றும் போக்குவரத்து வசதிகள்
பக்தர்களின் மருத்துவத் தேவைகளைக் கருத்தில் கொண்டு 3 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும், அவசர சிகிச்சைக்காக 6 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளன.
கழிப்பறை வசதிகளைப் பொறுத்தவரை, 325 நிரந்தரக் கழிப்பறைகள் மற்றும் 300 தற்காலிகக் கழிப்பறைகள் என மொத்தம் 625 கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்காக சுமார் 10 ஆயிரம் வாகனங்கள் நிறுத்தும் வகையில் 12 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த அரசு பேருந்துகள் மற்றும் மினி பேருந்துகள் மூலம் சுற்றுப் பேருந்து சேவைகளும் இயக்கப்பட உள்ளன.
மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகளும், சென்னை மற்றும் திருநெல்வேலியில் இருந்து சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன.
கடலில் நீராடும் பக்தர்களுக்குப் பாதுகாப்பு
திருச்செந்தூர் கடலில் புனித நீராட வரும் பக்தர்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஆழமான பகுதிகளுக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில் கடலில் தடுப்பு மிதவைகள் அமைக்கப்பட உள்ளன. தீயணைப்புத் துறையினர் மற்றும் கடல் பாதுகாப்புக் குழுவினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
கந்த சஷ்டி திருவிழா நாளை தொடங்க உள்ள நிலையில், ஏற்கெனவே பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
குறிப்பாக நவம்பர் 15ஆம் தேதி நடைபெறவுள்ள சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்களின் பாதுகாப்பு, தங்குமிடம், மருத்துவம், கழிப்பறை மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மகா தீபத் திருவிழா: தீபமலை உச்சியில் காவல்துறையினர் சிறப்பு பூஜை!
