தமிழகத்தில் நூல் கொள்முதல் தொடர்பாக எழுந்துள்ள முறைகேடு புகார்கள் குறித்து, மாநிலம் முழுவதும் உள்ள 4,000-க்கும் மேற்பட்ட நூலகங்களிலும் விசாரணை நடத்தப்படும் என்றும், விசாரணையில் தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
கன்னிமாரா நூலகத்தில் 500 போலி நூல்கள்?

சென்னை கன்னிமாரா பொது நூலகத்தில் 500 போலி நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் 4,000-க்கும் மேற்பட்ட நூலகங்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அனைத்து நூலகங்களிலும் புத்தகக் கொள்முதல் தொடர்பாக ஆய்வு செய்து விசாரணை நடத்தப்படும் எனக் கூறியுள்ளார்.
குழந்தைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த விஷயங்களில் முதலமைச்சர் விஜய் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருவதாகவும், இந்த விவகாரத்தில் விசாரணை எவ்விதத் தலையீடும் இன்றி நேர்மையாக நடைபெறும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார். முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்கள் ரத்து?
இதற்கிடையே, ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்கள் தொடர்பான நடவடிக்கைகள் ரத்து செய்யப்படும் என்றும், இந்த விவகாரம் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். பீனிக்ஸ் பதிப்பகம் தொடர்பான புத்தகக் கொள்முதல் குறித்தும் விசாரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
அகல் விளக்கு பதிப்பகம் குறித்து பதிப்பாளர்கள் சங்கமான பபாசிக்குக் கூட தெரியவில்லை என்று குறிப்பிட்ட அமைச்சர், பெரியார் பெயரைப் பயன்படுத்தி மோசடி நடைபெற்றுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
யார் இந்த நிவேதா பால்ராஜ்? – அமைச்சர் கேள்வி
கன்னிமாரா நூலகத்தில் கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்கள் தொடர்பாகப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், நிவேதா பால்ராஜ், நிவேதா அன்பழகன், நிவேதா மோகன், சச்சின் உள்ளிட்ட பெயர்களில் நூல்கள் இடம்பெற்றுள்ளதாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தப் பெயர்களில் வெளியான புத்தகங்களின் உண்மைத்தன்மை குறித்தும், அவற்றின் ஆசிரியர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இல்லாத எழுத்தாளர்கள் பெயரில் ஏஐ மூலம் புத்தகங்கள் தயாரிப்பு எனக் குற்றச்சாட்டு
கமலாம்பாள் கருணாநிதி, பவுனம்மாள் கருணாநிதி போன்ற பெயர்களில் உண்மையில் இல்லாத எழுத்தாளர்களைக் குறிப்பிட்டு, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் புத்தகங்கள் உருவாக்கப்பட்டதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், நிவேதா பால்ராஜ், நிவேதா அன்பழகன், நிவேதா மோகன் உள்ளிட்ட பெயர்களில் பல்வேறு துறைகளைச் சார்ந்த புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு நூலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் புத்தகங்களின் ஆசிரியர்கள், பதிப்பகங்கள், கொள்முதல் நடைமுறைகள் மற்றும் அவற்றுக்கான அனுமதிகள் உள்ளிட்ட அம்சங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதல் விவகாரம் அரசியல் ரீதியாகவும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை மற்றும் மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ள ஆய்வின் முடிவுகள் இந்தப் புகார்களின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
