பழனி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்றான கந்த சஷ்டி திருவிழா இன்று (நவம்பர் 10) காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
இதையொட்டி பழனி மலைக்கோயிலில் முருகப்பெருமான், வீரபாகு, துவாரபாலகர்கள் மற்றும் நவ வீரர்களுக்குக் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தங்களது கைகளில் காப்பு அணிந்து கந்த சஷ்டி விரதத்தைத் தொடங்கினர். குறிப்பாகப் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு காப்பு கட்டி விரதத்தை மேற்கொண்டனர்.

ஆறு நாட்கள் கடுமையான விரதம்
கந்த சஷ்டி விழாவையொட்டி இன்று முதல் ஆறு நாட்களுக்கு பக்தர்கள் விரதம் கடைப்பிடிக்கின்றனர். குறிப்பாகப் பெண்கள் சிலர் உணவு உட்கொள்ளாமல் பால் மற்றும் பழங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு விரதம் இருப்பதாகத் தெரிவித்தனர்.
கந்த சஷ்டி விரதத்தின்போது வேண்டிக்கொண்ட பிரார்த்தனைகள் நிறைவேறுவதாக நம்புவதால், ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து விரதம் கடைப்பிடித்து வருவதாகப் பக்தர்கள் கூறினர்.
மேலும், சபரிமலைக்குச் செல்லும் ஆண்கள் மாலை அணிந்து விரதம் இருப்பதைப் போல, கந்த சஷ்டி நாட்களில் பெண்களும் கைகளில் காப்பு அணிந்து கடுமையான விரதத்தை மேற்கொள்வதாகத் தெரிவித்தனர்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும், உடல் ஆரோக்கியம் மேம்படவும் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதாகக் காயத்திரி, லீலாவதி, உமா மகேஷ்வரி, கௌசயா உள்ளிட்ட பெண் பக்தர்கள் தெரிவித்தனர்.
நவம்பர் 15-ல் சூரசம்ஹாரம்
கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் நவம்பர் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 16ஆம் தேதி திங்கட்கிழமை முருகப்பெருமான் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளைப் பழனி திருக்கோயில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
கந்த சஷ்டி விழா தொடங்கியுள்ள நிலையில், அடுத்தடுத்த நாட்களில் பழனி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
