சிவகார்த்திகேயனின் சேயோன் பட அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயனுக்கு, ‘அமரன்’ திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, தனது அடுத்தடுத்த திரைப்படங்களின் கதைத் தேர்வில் சிவகார்த்திகேயன் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தனது 27ஆவது திரைப்படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.
அதே வேளையில், அவர் நடித்து வரும் ‘சேயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கிய நிலையில் இந்த படத்தை 2027 மார்ச் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகி வரும் சேயோன் படத்தின் படப்பிடிப்பு, தற்போது திருச்சியில் முழுவீச்சில் நடந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முருகப்பெருமானை மையப்படுத்திய கதைக்களத்தில் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் ‘சேயோன்’ திரைப்படம், சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் மற்றொரு முக்கியப் படைப்பாக அமையும் என ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மேலும் சேயோன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பாக்கியஸ்ரீ போர்ஸ் , சீமான், ராஜ் பி. ஷெட்டி, பால சரவணன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
