தெலுங்குத் திரையுலகில் பல்வேறு காரணங்களுக்காக இதுவரை 8 முறை தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், தன்னைப் புறக்கணிக்க முயற்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்திய தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில், தன் மீதான புறக்கணிப்பு முயற்சிகள், இயக்குநர் ராஜமௌலியின் ‘வாரணாசி’ திரைப்பட வாய்ப்பு மற்றும் சினிமா பயணத்தில் சந்தித்த தடைகள் குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.


“என்னைத் தடுக்கலாம்; மக்களின் வரவேற்பைத் தடுக்க முடியாது!”
தனது நடிப்பில் வெளியான ‘கே.ஜி.எஃப்’, ‘த்ரிஷ்யம் 3’ உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகும் நேரங்களில் தன்னைப் புறக்கணிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் சிலர் குரல் எழுப்பியதாகப் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இத்தகைய எதிர்ப்புகளையும் மீறி திரைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதாகக் குறிப்பிட்ட அவர், தன்னைத் திரைப்படங்களில் நடிக்கவிடாமல் தடுக்கச் சிலர் முயற்சி செய்யலாம் என்றும், ஆனால் மக்கள் தனது நடிப்பை ஏற்றுக்கொள்வதை யாராலும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
ஒரு நடிகராகத் தனது திறமையை யாராலும் முடக்க முடியாது என்பதே அவரது பேட்டியின் முக்கியக் கருத்தாக அமைந்துள்ளது.
ராஜமௌலியின் ‘வாரணாசி’ படத்திலும் எதிர்ப்புகளா?
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்டத் திரைப்படமான ‘வாரணாசி’யில் பிரகாஷ் ராஜ் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் அவரை நடிக்க வைக்கக் கூடாது என்று சமூக வலைதளங்களில் சிலர் எதிர்ப்புத் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஒரு திரைப்படத்தில் யார் நடிக்க வேண்டும் என்பதைத் திறமையின் அடிப்படையில் படக்குழுவினர் முடிவு செய்ய வேண்டும் என்றும், வெளிப்புற அழுத்தங்களால் கலைஞர்களின் வாய்ப்புகளைப் பறிக்க முடியாது என்றும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் 8 முறை தடை – பின்னணி என்ன?
தெலுங்குத் திரையுலகில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதன்முறையாகத் தடை செய்யப்பட்டதாகக் கூறியுள்ள பிரகாஷ் ராஜ், படப்பிடிப்புகளுக்குத் தாமதமாக வருவது மற்றும் கால்ஷீட் ஒப்பந்தங்கள் தொடர்பான புகார்கள் தன் மீது முன்வைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற ‘மா’ (MAA) நடிகர் சங்கத் தேர்தலில் விஷ்ணு மஞ்சுவை எதிர்த்துப் போட்டியிட்டதும், அதன் தொடர்ச்சியாக உருவான அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான முரண்பாடுகளும் தனக்கு எதிரான சூழலை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து விளக்கமளித்த பிரகாஷ் ராஜ், தான் யாரையும் கொடுமைப்படுத்தவில்லை என்றும், எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார். பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வருவதால் சில நேரங்களில் படப்பிடிப்புக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம் என்றும், தனது நடிப்பின் அடிப்படையில் தன்னை மதிப்பிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சினிமாவும் அரசியல் நிலைப்பாடும்
திரைப்படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்துள்ள பிரகாஷ் ராஜ், பொதுவெளியில் தனது அரசியல் கருத்துகளைத் தயக்கமின்றி வெளிப்படுத்தி வருகிறார். பல்வேறு சமூக மற்றும் அரசியல் விவகாரங்களில் அவர் தெரிவிக்கும் கருத்துகள் காரணமாக ஒரு தரப்பினரின் எதிர்ப்பையும் சந்தித்து வருகிறார்.
இருப்பினும், சித்தாந்த ரீதியான எதிர்ப்புகள் அல்லது புறக்கணிப்பு முயற்சிகள் தனது கலைப் பயணத்தைப் பாதிக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.
தன்னைத் தடை செய்ய முயற்சிப்பவர்களால் தனது நடிப்பையும், ரசிகர்களின் ஆதரவையும் தடுக்க முடியாது என்ற பிரகாஷ் ராஜின் இந்தப் பேட்டி திரையுலகில் கவனத்தைப் பெற்றுள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்படும் தனுஷின் ‘ஓம்’…. டிரெய்லர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!
