அஜித்தின் ‘டேர் டெவில்’ பட லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் குமார், கடைசியாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதே சமயம் சினிமாவைத் தாண்டி, சர்வதேச அளவிலான கார் பந்தயங்களிலும் தீவிரமாக ஈடுபட்டு அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து, இந்தியாவிற்குப் பெருமை சேர்த்து வருகிறார் அஜித்.
இந்நிலையில், ‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி மீண்டும் இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. இப்படத்திற்கு ‘டேர்டெவில்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஷாலினி அஜித்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு, இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து பிரபு, பார்த்திபன், ஸ்ரீலீலா, உன்னி முகுந்தன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு இப்படம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், கடந்த நவம்பர் 2-ஆம் தேதி படத்தின் பூஜை விமரிசையாக நடைபெற்றது. பூஜை விழாவில் இந்தப் படத்தை ஷாலினி அஜித்குமார் தொடங்கி வைத்தார். மேலும் நடிகர் அஜித், வெளிநாடுகளில் கார் பந்தயத்தை முடித்துவிட்டு ஏற்கனவே சென்னை திரும்பியிருந்த நிலையில் தற்போது முழு வீச்சில் படப்பிடிப்பிற்குத் தயாராகி விட்டார்.
அதன்படி, ‘டேர்டெவில்’ திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு இன்று (நவம்பர் 12) ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹைதராபாத் படப்பிடிப்பைத் தொடர்ந்து, அடுத்தகட்டப் பணிகள் சென்னை மற்றும் வெளிநாடுகளில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இது தவிர இந்த படம் வரும் 2027-ஆம் ஆண்டு கோடை விடுமுறையிலோ அல்லது ஆயுத பூஜை சிறப்பாகவோ திரையரங்குகளில் வெளியாகும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

