மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான பிரித்விராஜ் சுகுமாரன், ஒரு சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த இயக்குநராகவும் இந்திய சினிமாவில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துள்ளார்.
குறிப்பாக, மோகன்லால் நடிப்பில் இவர் இயக்கிய ‘லூசிஃபர்’ திரைப்படம் அதிக வசூலை வாரிக் குவித்தது. அதைத் தொடர்ந்து இவர் லூசிபர் இரண்டாம் பாகம் எம்புரான் திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். இதற்கிடையில் படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வரும் பிரித்விராஜூக்கு கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே இவருடைய அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு தமிழ் ரசிகர்களிடமும் அதிகமாக இருந்து வருகிறது.
அதாவது பிரித்விராஜ் தனது ஒவ்வொரு படங்களிலும் தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார். இருப்பினும் பிரித்விராஜ் ரசிகர்களுக்கு இந்த 2026-ஆம் ஆண்டு சற்று ஏமாற்றமளிக்கும் ஆண்டாகவே அமைந்துள்ளது. இந்த ஆண்டில் இவரது நடிப்பில் வெளியான ‘ஐ, நோபடி’ ‘காலிஃபா’ மற்றும் ‘டாயரா’ ஆகிய மூன்று திரைப்படங்களுமே ரசிகர்களிடையே பெரிய அளவில் சென்றடையவில்லை. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்த மூன்று படங்களும் பாக்ஸ் ஆபீஸில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறத் தவறிவிட்டன. எனவே ரசிகர்கள் அனைவரும் பிரித்விராஜின் அடுத்த படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு பிரித்விராஜ் நடித்திருக்கும் வாரணாசி திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் பிரித்விராஜ் கும்பா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடைய போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. எனவே பிரம்மாண்டமாக உருவாகும் வாரணாசி திரைப்படம் 2027-ஆம் ஆண்டில் வெளியாகவுள்ள நிலையில், இந்த படமானது பிரித்விராஜுக்கு கம்பேக் படமாக அமையும் என்று நம்பப்படுகிறது.

