உலகம் முழுவதும் சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணையவழிச் சேவை முடக்கம் தற்போது படிப்படியாகச் சீரடைந்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பல்வேறு சேவைகள் திடீரென முடங்கியதால் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக Outlook மின்னஞ்சல் சேவை, Microsoft Teams மற்றும் Microsoft 365 உள்ளிட்ட சேவைகளைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டன.
இந்நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் சார்லஸ் லமன்னா, இது தொடர்பாக எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலகளவில் மைக்ரோசாஃப்ட் சேவைகள் படிப்படியாகச் சீரடைந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆசியா – பசிபிக் பிராந்தியத்தின் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் முழுமையடைந்துள்ளதாகவும், தரவுப் போக்குவரத்து படிப்படியாகச் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மின்னஞ்சல் கணக்குகளை அணுகுவது, மின்னஞ்சல்களை அனுப்புவது உள்ளிட்ட முக்கிய சேவைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், சேவைகள் முழுமையாகச் சீரடையும் வரை சில பயனர்களுக்கு அவ்வப்போது இணைப்புச் சிக்கல்கள் மற்றும் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.
மேலும், இந்தச் சேவை முடக்கமானது விஷமத்தனமான செயல்களாலோ அல்லது சைபர் தாக்குதலாலோ ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் இதுவரை இல்லை என்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தும் மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சேவைகள் எப்போது முழுமையாகச் சீரடையும் எனப் பயனர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
